மிரட்டி பணம் பறித்த வழக்கு நிகழ்ச்சி தொகுப்பாளினி கைது
மிரட்டி பணம் பறித்த வழக்கு நிகழ்ச்சி தொகுப்பாளினி கைது
மிரட்டி பணம் பறித்த வழக்கு நிகழ்ச்சி தொகுப்பாளினி கைது
ADDED : ஜூலை 12, 2024 07:05 AM

பெங்களூரு: 'ஸ்பா' உரிமையாளரை மிரட்டி, பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த, தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யா வசந்தா, கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரின், தொலைக்காட்சி சேனல் ஒன்றில், நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றுபவர் திவ்யா வசந்தா, 28. இவர் தன் சகோதரர் சந்தேஷ், வெங்கடேஷ் உட்பட சிலருடன் சேர்ந்து, 'வாட்ஸாப்'பில் 'ஸ்பை ரிசர்ச் டீம்' என்ற பெயரில், குரூப் அமைத்து கொண்டார். இதன் மூலம் பணக்காரர்களை குறி வைத்து, பணம் பறித்தனர்.
இந்திரா நகரின் 100 அடி சாலையின், 15வது பிரதான சாலையில் உள்ள, 'ஸ்பா' ஒன்றில் திவ்யா கும்பல், வெளி மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை பணிக்கு சேர்த்தனர். சந்தேஷ் வாடிக்கையாளரை போன்று, ரகசிய கேமராவுடன் அவ்வப்போது ஸ்பாவுக்கு செல்வார். ஸ்பா உரிமையாளர் சிவசங்கர், இளம் பெண்ணுடன் நெருக்கமாக பேசுவதை கேமராவில் பதிவு செய்து கொண்டார்.
இதை அவருக்கு அனுப்பி, 'உங்கள் ஸ்பாவில் விபச்சாரம் செய்கிறீர்கள். இதை நாங்கள் தொலைக்காட்சியில் பிரசுரிப்போம். 15 லட்சம் ரூபாய் கொடுங்கள். இல்லாவிட்டால் வீடியோவை ஒளிபரப்புவோம்' என, மிரட்டினர். பயந்த சிவசங்கர், 1 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால், ஜெ.பி.நகர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். போலீசாரும் விசாரணையை துவக்கினர். வழக்கு பதிவானதும் திவ்யா வசந்தா தலைமறைவானார். வெங்கடேஷ், சந்தேஷை கைது செய்தனர். திவ்யாவை தேடி வந்தனர்.
தீவிர விசாரணையில், இவர் தமிழகத்துக்கு சென்று, அங்கிருந்து கேரளாவுக்கு தப்பியதை கண்டுபிடித்தனர். போலீஸ் குழுவினர், கேரளாவுக்கு சென்று அவரை கண்டுபிடித்து, நேற்று கைது செய்தனர்.