நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி
நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி
நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி
ADDED : ஜூலை 09, 2024 01:03 AM
ராஞ்சி,ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. நில அபகரிப்பு மோசடி வழக்கில், கடந்த ஜன., 31ல் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவர் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து, ஜார்க்கண்ட் புதிய முதல்வராக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மூத்த தலைவர் சம்பாய் சோரன் பதவியேற்றார். ஜூன் 28ல், ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
ஐந்து மாத சிறைவாசத்துக்கு பின், அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதையடுத்து, முதல்வர் பதவியை சம்பாய் சோரன் ராஜினாமா செய்தார். சமீபத்தில், ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றார்.
இந்நிலையில் நேற்று ஜார்க்கண்ட் சட்டசபையில், முதல்வர் ஹேமந்த் சோரன் அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. லோக்சபா தேர்தலுக்கு பின், 81 எம்.எல்.ஏ.,க்களை உடைய ஜார்க்கண்ட் சட்டசபையின் பலம், 75 ஆக உள்ளது.
சில எம்.எல்.ஏ.,க்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றதாலும், சிலர் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாலும் சட்டசபையின் பலம் குறைந்தது.
நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னதாக, சட்டசபையில் இருந்து பா.ஜ., கூட்டணி வெளிநடப்பு செய்தது. தொடர்ந்து நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், முதல்வர் ஹேமந்த் சோரன் அரசுக்கு ஆதரவாக, 45 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்ததை அடுத்து, அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் உட்பட 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
வரும் அக்டோபரில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.