ஹாவேரியில் பரவும் எலி காய்ச்சல் சுகாதார துறை அதிகாரிகள் கவலை
ஹாவேரியில் பரவும் எலி காய்ச்சல் சுகாதார துறை அதிகாரிகள் கவலை
ஹாவேரியில் பரவும் எலி காய்ச்சல் சுகாதார துறை அதிகாரிகள் கவலை
ADDED : ஜூலை 08, 2024 06:30 AM
ஹாவேரி: கர்நாடகாவில் அதிகரிக்கும் டெங்குவால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் பரவுகிறது. ஹாவேரியில் எலி காய்ச்சலால் சிறுவன் பாதிக்கப்பட்டதால், சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களில் வேகமாக பரவுவதால், மக்களும், சுகாதாரத் துறையும் பீதியில் உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. நோயை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத் துறை திண்டாடுகிறது.
மழைக் காலத்தில் நோய்கள் பரவுவது சகஜம். மழைக்காலம் துவங்குவதற்கு முன்பே, சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
கொசுக்கள் அதிகரிக்காமல் தடுத்திருக்க வேண்டும். இதை செய்யாமல், சுகாதாரத்துறை அலட்சியம் காண்பித்தது.
இதன் விளைவாக டெங்கு அதிகரிப்பதாக, மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஹாசன் அரசிகெரேவின், முதுடி கிராமத்தை சேர்ந்த சுப்ரிதா, 23, கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார்.
நான்கு நாட்களுக்கு முன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், அவருக்கு டெங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கதக்கின் சிரஞ்சா கிராமத்தில் வசித்த சிராயி ஹொசமனி, 5, என்ற சிறுவனும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். இதனால் கிராமத்தினர் பீதியில் உள்ளனர்.
இந்நிலையில், ஹாவேரியில், எலி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஹாவேரியின், கிராமம் ஒன்றில் வசிக்கும் 12 வயது சிறுவன், 15 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டார். மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர்கள் மஞ்சள் காமாலை இருக்கலாம் என, சந்தேகித்து ரத்த பரிசோதனை செய்ததில், எலி காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எலி காய்ச்சல் தென்பட்ட கிராமத்துக்கு, சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்கின்றனர்.