ஆணாக மாறிய ஐ.ஆர்.எஸ்., அதிகாரி பாலின மாற்றத்துக்கு அரசு ஒப்புதல்
ஆணாக மாறிய ஐ.ஆர்.எஸ்., அதிகாரி பாலின மாற்றத்துக்கு அரசு ஒப்புதல்
ஆணாக மாறிய ஐ.ஆர்.எஸ்., அதிகாரி பாலின மாற்றத்துக்கு அரசு ஒப்புதல்
ADDED : ஜூலை 11, 2024 12:56 AM

புதுடில்லி,வரலாற்றிலேயே முதன்முறையாக பெண்ணாக இருந்து ஆணாக மாறிய சென்னையை சேர்ந்த ஐ.ஆர்.எஸ்., மூத்த அதிகாரியின் பெயர் மற்றும் பாலின மாற்றத்துக்கு, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் அலுவலகத்தில், இணை ஆணையராக அனுசுயா என்ற பெண் அதிகாரி பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் ஆணாக மாறியதை அடுத்து, தன் பெயரை அனுகதிர் சூர்யா என மாற்றம் செய்துள்ளார்.
பாலின மாற்றம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திடம் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இதை பரிசீலித்த அமைச்சகம், அதை ஏற்றுக் கொண்டதுடன் அவரின் பெயர் மற்றும் பாலின மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அது தொடர்பான உத்தரவில், 'அனுசுயாவின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. இனி அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் எம்.அனுகதிர் சூர்யா என அவர் அறியப்படுவார்' என, அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2013ல் சென்னையில் உதவி ஆணையராக பணியை துவங்கிய அனுகதிர் சூர்யா, 2018ல் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார்.
சென்னையில் உள்ள எம்.ஐ.டி., எனப்படும், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் இளநிலை பட்டம் பெற்ற அவர், தேசிய சட்ட நிறுவன பல்கலையில் 'சைபர்' சட்டம் மற்றும் சைபர் தடயவியல் பிரிவில் முதுகலை டிப்ளமா பயின்றுள்ளார்.
கடந்த 2014ல் மூன்றாம் பாலினத்தை அங்கீகரித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அவர்களுக்கும் பொருந்தும் என தெரிவித்திருந்தது. இந்த சூழலில், அனுசுயாவின் பாலின மாற்றத்தை நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.