மனைவிக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் சித்தராமையாவுக்கு கவர்னர் நோட்டீஸ்
மனைவிக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் சித்தராமையாவுக்கு கவர்னர் நோட்டீஸ்
மனைவிக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் சித்தராமையாவுக்கு கவர்னர் நோட்டீஸ்
ADDED : ஆக 02, 2024 12:10 AM

பெங்களூரு: 'உங்கள் மீதான முறைகேடு புகார் குறித்து, லஞ்ச ஒழிப்பு பிரிவின் கீழ் விசாரணை நடத்த ஏன் அனுமதி அளிக்க கூடாது?' என கேட்டு, கர்நாடக காங்., முதல்வர் சித்தராமையாவுக்கு அம்மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என, கர்நாடக அமைச்சரவை நேற்று அதிரடி தீர்மானம் நிறைவேற்றியது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வரின் மனைவி பார்வதிக்கு 14 மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது, தன் மைத்துனர் தானமாக கொடுத்தது என்றும், இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் முதல்வர் தெரிவித்தார். ஆனாலும், முறைகேடு நடந்தது உண்மை என்று பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
புகார்
பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபிரஹாம் என்பவர், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, முறைகேடு தொடர்பாக ஆவணங்களுடன் புகார் அளித்தார். எதிர்க்கட்சியினரும் கவர்னரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில், நேற்று காலை அனைத்து அமைச்சர்களுக்கும் முதல்வர் சிற்றுண்டி விருந்து வைத்தார். அப்போது முறைகேடு குறித்து, விளக்கம் கேட்டு கவர்னர் தனக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.
பின், கவர்னர் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வகையில், அமைச்சரவையை கூட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த விஷயம் தனக்கு தொடர்புடையது என்பதால் முதல்வர் பங்கேற்காமல், துணை முதல்வர் தலைமையில் மதியம் 12:40 முதல் மாலை 4:00 மணி வரை அமைச்சரவை கூட்டம் நடந்தது.
அமைச்சரவையில் எடுத்த முடிவு குறித்து, துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
கன்னடர்களின் ஆசியுடன் முழு பெரும்பான்மையுடன் அமைந்த கர்நாடக காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு கவர்னரை கைப்பாவையாக பயன்படுத்துகிறது.
முதல்வருக்கு கவர்னர்அளித்துள்ள நோட்டீஸ், சட்டத்துக்கு புறம்பானது. புகார் அளித்துள்ள டி.ஜே.ஆபிரஹாம், குற்ற பின்னணி கொண்டவர். சட்டத்தை தவறாக பயன்படுத்தி கொள்வதில் பிரசித்தி பெற்றவர்.
இத்தகைய நபர் அளித்த புகார் மீது, முதல்வருக்கு, கவர்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், 'உங்கள் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவின் கீழ், விசாரணை நடத்த ஏன் அனுமதி அளிக்கக் கூடாது?' என கேட்டு, ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்கும்படியும் தெரிவித்து உள்ளார்.
ஆலோசனை
கவர்னர் அளித்த கால அவகாசம், ஆக., 1ல் முடிந்தது. அவர் அளித்த நோட்டீஸ், அரசியல் அமைப்புக்கு எதிரானது. கன்னடர்கள் ஆசிர்வாதத்துடன் தேர்வு செய்யப்பட்ட இந்த ஆட்சியை காக்க, சட்டம் மற்றும் அரசியல் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்.
கவர்னர் அளித்த நோட்டீசை வாபஸ் பெறும்படி, அனைத்து அமைச்சர்களும் ஒருமித்த குரலாக தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், 'மூடா' முறைகேடு தொடர்பாக, டில்லியில் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், சட்ட வல்லுனர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். முதல்வர் சித்தராமையாவும், பெங்களூரில் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.