விசாரணையில் இருந்து கவர்னருக்கு விலக்கு? சட்டப்பிரிவை ஆய்வு செய்ய கோர்ட் ஒப்புதல்
விசாரணையில் இருந்து கவர்னருக்கு விலக்கு? சட்டப்பிரிவை ஆய்வு செய்ய கோர்ட் ஒப்புதல்
விசாரணையில் இருந்து கவர்னருக்கு விலக்கு? சட்டப்பிரிவை ஆய்வு செய்ய கோர்ட் ஒப்புதல்
ADDED : ஜூலை 20, 2024 12:18 AM
புதுடில்லி : கவர்னர்கள் பதவியில் இருக்கும் வரை அவர்கள் மீது குற்றவியல் வழக்கு விசாரணை நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் அரசியலமைப்பின் 361வது பிரிவின் வரையறைகளை ஆய்வு செய்ய சம்மதித்த உச்ச நீதிமன்றம், இந்த சட்டப்பிரிவு செல்லுமா என்றும் ஆய்வு செய்யவுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக ஆனந்த போஸ் உள்ளார்.
கோல்கட்டாவில் உள்ள கவர்னர் மாளிகையில் பணியாற்றி வந்த ஒப்பந்த பெண் ஊழியர், கவர்னர் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.
கடந்த ஏப்., 24 மற்றும் மே 2ல், கவர்னர் ஆனந்த போஸால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குறிப்பிட்டு இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 361ன் படி, ஜனாதிபதி, கவர்னர் ஆகியோர் பதவியில் இருக்கும் வரை, அவர்கள் மீதான குற்றவியல் வழக்குகளில் விசாரணை நடத்த முடியாது.
எனவே, இந்த சட்டப்பிரிவின் வரையறைகளை ஆய்வு செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 'இதுபோன்ற வழக்குகளில் கால அவகாசம் மிகவும் முக்கியம்.
விசாரணையில் இருந்து கவர்னருக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கினால் விசாரணை தடைபடக்கூடாது' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், “விசாரணையே கூடாது என்ற நிலை இருக்க கூடாது. ஆதாரங்களை இப்போதே சேகரிக்க வேண்டிய தேவை உள்ளது. கவர்னர் பதவிக்காலம் முடியும் வரை விசாரணைக்காக காத்திருக்க முடியாது,” என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், குற்றவியல் விசாரணையில் இருந்து கவர்னருக்கு விலக்கு அளிக்கும் அரசியலமைப்பு சட்டம் 361வது பிரிவின் வரையறைகளை ஆய்வு செய்ய ஒப்புக் கொண்டனர். இந்த சட்டப்பிரிவு செல்லுமா என்று ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கோரிக்கையின் அடிப்படையில், மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், மத்திய அரசையும் வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்க அப்பெண்ணுக்கு சுதந்திரம் வழங்கியது.