ஆறு புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறது அரசு
ஆறு புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறது அரசு
ஆறு புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறது அரசு
ADDED : ஜூலை 20, 2024 02:06 AM

புதுடில்லி : பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆறு புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ல் துவங்கி, ஆக., 12ல் முடிவடைகிறது. 23ல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 - 25ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், இந்த கூட்டத்தொடரின் போது ஆறு புதிய மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இதன்படி, 90 ஆண்டுகள் பழமையான விமானச் சட்டத்துக்கு பதில், பாரதிய வாயுயான் விதேயக் - 2024 என்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது, விமானப் போக்குவரத்து துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கான ஏற்பாடுகளை வழங்குகிறது.
மேலும், நிதி மசோதா தவிர, பேரிடர் மேலாண்மை திருத்த மசோதாவும் அறிமுகமாகிறது. இதே போல், கொதிகலன்கள் மசோதா, காபி மேம்பாடு மசோதா, ரப்பர் விளம்பரம் மற்றும் மேம்பாடு ஆகிய மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இதற்கிடையே, பார்லி.,யின் நடவடிக்கைகளை தீர்மானிக்கும் அலுவல் ஆலோசனைக் குழுவை அமைத்து, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று உத்தரவிட்டார்.
இந்த குழுவில், பா.ஜ.,வைச் சேர்ந்த அனுராக் தாக்குர், பி.பி.சவுத்ரி, நிஷிகாந்த் துபே; காங்கிரசைச் சேர்ந்த கவுரவ் கோகோய், கொடிக்குன்னில் சுரேஷ்; திரிணமுல் காங்.,கின் சுதிப் பந்தோபாத்யாய்; தி.மு.க.,வின் தயாநிதி மாறன்; தெலுங்கு தேசத்தின் கிருஷ்ண தேவராயலு உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.