ADDED : ஜூலை 15, 2024 04:49 AM

தங்கவயல், : ''தங்கச் சுரங்கத்துக்கு சொந்தமான சயனைட் மண்ணில் தங்கம் எடுக்கும் பணிகள், அவ்வளவு எளிதல்ல,'' என்று கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு தெரிவித்துள்ளார்.
தங்கச் சுரங்கத்தை புனரமைத்து, புதிய தொழில்நுட்பம் பயன் படுத்தி, தங்கம் எடுக்கும் பணியை செய்ய வேண்டும் என்று 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். ஆனால் தங்கம் எடுக்கும் செலவு அதிகமாக இருப்பதால், தங்கச் சுரங்கத் தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
பூமிக்கு அடியில் வெட்டி எடுத்த பாறை கற்களை அரைத்தெடுத்த கழிவு மண் தான், 13 இடங்களில் கொட்டி வைத்துள்ளனர். இது, சயனைட் மலை என்றழைக்கப் படுகிறது.
இந்த மண்ணில் உள்ள தங்கத்தை மற்றும் பிற உலோக பொருட்களை சுத்திகரிப்பு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
இது குறித்து, கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ் பாபு நேற்று அளித்த பேட்டி:
கோலார் மாவட்டத்தில் உள்ள தங்கச் சுரங்கம் மூடப்பட்டுள்ளது. திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ள மண்ணை, மீண்டும் சுத்திகரிப்பு செய்தால் ஒரு டன் மண்ணில் 0.5 கிராம் தங்கம் கிடைக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது. 500 ரூபாய் மதிப்பிலான, 0.5 கிராம் தங்கம் எடுக்க, குறைந்தது 2,500 ரூபாய் செலவாகும்.
மண்ணை சுத்திகரிப்பு செய்ய 'ஜேசிபி' இயந்திரங்கள், போக்குவரத்து வாகனங்கள் பயன் படுத்த வேண்டும். இதில்,பல்வேறு பிரச்னைகள் உள்ளது.
கடந்த 15 நாட்களுக்கு முன் இது சம்பந்தமாக என்னையும், கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமியையும் தொழில்நுட்பக் குழுவினர் சந்தித்தனர். 'பைலட் புராஜெக்ட்' தயார்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
தொழில்நுட்ப குழுவினரின் திட்ட அறிக்கையின்படி சாதக பாதகம் குறித்து தெரிந்த பின்னர் தான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
சயனைட் மண்ணில் தங்கம் எடுக்கும் தொழில் உடனடியாக துவங்க வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.