இரண்டு மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற சிறுமி கைது
இரண்டு மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற சிறுமி கைது
இரண்டு மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற சிறுமி கைது
ADDED : ஜூலை 09, 2024 01:08 AM
யாத்கிர், கர்நாடக மாநிலம் யாத்கிர் அருகே, இரண்டு மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற, 15 வயது சிறுமி கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், யாத்கிர் மாவட்டம், அம்பேத்கர் படவனே பகுதியில் வசிப்பவர் நாகேஷ், 30. இவரது மனைவி சட்டம்மா, 28. இந்த தம்பதிக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. மீனாட்சி என்று பெயர் சூட்டியிருந்தனர்.
கடந்த 6ம் தேதி, வீட்டின் தொட்டிலில் துாங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குழந்தையின் உடல் மிதந்தது. வீட்டில் இருந்து குழந்தையை துாக்கி வந்து யாரோ கிணற்றில் வீசியிருப்பது தெரிந்தது. போலீசில் புகார் செய்யப்பட்டது.
சந்தேகத்தின் அடிப்படையில், நாகேஷ் வீட்டின் அருகில் வசிக்கும், 15 வயது சிறுமியிடம் போலீசார் விசாரித்தனர். குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்றதை ஒப்புக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
சட்டம்மாவின் தம்பி எல்லப்பாவை, சிறுமி ஒருதலையாக காதலித்துள்ளார். பல முறை தன் காதலை வெளிப்படுத்தியும், எல்லப்பா ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால், அவர் மீது இருந்த கோபத்தில், அவரது அக்கா குழந்தையை கிணற்றில் வீசி, சிறுமி கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.