மலேரியா பாதிப்பு அதிகரிப்பு வல்லுனர்கள் எச்சரிக்கை
மலேரியா பாதிப்பு அதிகரிப்பு வல்லுனர்கள் எச்சரிக்கை
மலேரியா பாதிப்பு அதிகரிப்பு வல்லுனர்கள் எச்சரிக்கை
ADDED : ஜூலை 27, 2024 05:08 AM
பெங்களூரு, : பெங்களூரில் டெங்குவை தொடர்ந்து, மலேரியா காய்ச்சல் பரவுகிறது. 'முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால், சூழ்நிலை மோசமாகும்' என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக, பெங்களூரு உட்பட கர்நாடகா முழுதும் டெங்கு வாட்டி வைத்தது. நோயாளிகள் எண்ணிக்கை ஏறுமுகமானது. உயிரிழப்புகளும் ஏற்பட்டது. அதன்பின், 'நிபா' தொற்று அச்சுறுத்தியது. இப்போது மலேரியா பரவுகிறது.
கர்நாடகாவில் நடப்பாண்டு டெங்கு கடுமையாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால், இம்முறை அதிகமானோர் டெங்குவால் பாதிப்படைந்து உள்ளனர்.
ஜனவரி முதல் ஜூலை வரை, மாநிலம் முழுதும் 15,544 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. பெங்களூரில் நேற்று முன்தினம் 203 பேருக்கு நோய் உறுதியானது.
டெங்குவை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறுகிறது. நோய் கட்டுக்குள் வரவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், நேற்று முன்தினம், பெங்களூரு விகாஸ் சவுதாவில், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
கடும் நடவடிக்கை எடுத்து, நோயை கட்டுப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், பெங்களூரில் மலேரியா ஏறுமுகமாகிறது. மருத்துவ பரிசோதனை செய்து கொள்வோரில், 80 சதவீதம் பேருக்கு டெங்கு, 20 பேருக்கு மலேரியா கண்டுபிடிக்கப்படுகிறது.
இதை கட்டுப்படுத்தா விட்டால், சூழ்நிலை மோசமாகும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவ வல்லுனர்கள் கூறியதாவது:
மலேரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கடுமையான காய்ச்சல், உடல் நடுக்கம், தலைவலி, உடல் வலி, வாந்தி இருக்கும்.
டெங்குவுக்கும் இதே அறிகுறி தென்படும். எனவே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டால்தான், என்ன நோய் என்பது தெரியும். அதற்கு சிகிச்சை பெறலாம்.
மழைக்காலம் என்பதால், பல நோய்கள் ஏற்படும். நோய் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக ரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. விரைந்து சிகிச்சை பெறாவிட்டால், உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.