மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து சந்தேகம்: எலான் மஸ்குக்கு முன்னாள் அமைச்சர் பதிலடி
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து சந்தேகம்: எலான் மஸ்குக்கு முன்னாள் அமைச்சர் பதிலடி
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து சந்தேகம்: எலான் மஸ்குக்கு முன்னாள் அமைச்சர் பதிலடி
ADDED : ஜூன் 16, 2024 11:17 PM

புதுடில்லி: மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து, தொழிலதிபர் எலான் மஸ்க் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதற்கான கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் மாகாண அளவிலான தேர்தல்கள் நடந்து வருகின்றன.
சமூக வலைதளம்
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடியின் உறவினரான ராபர்ட் எப் கென்னடி ஜூனியர் இதில் சுயேச்சையாக போட்டியிட முயற்சித்து வருகிறார்.
போர்ட்டோரிகாவில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதற்கு, மிகப் பெரும் பணக்கார தொழிலதிபரான எலான் மஸ்க், பதில் பதிவிட்டிருந்தார்.
அதில், 'மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை நம்ப முடியாது. மனிதர்களால் அல்லது செயற்கை நுண்ணறிவால் அதில் மாற்றங்கள் செய்ய முடியும். மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை கைவிட வேண்டும்' என, அவர் குறிப்பிட்டார்.
நம் நாட்டிலும், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் தொடர்பாக கட்சிகள் தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.
இந்நிலையில், எலான் மஸ்க் பதிவுக்கு பதிலளித்து, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சருமான ராஜிவ் சந்திரசேகர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
எலான் மஸ்கின் கருத்து, ஒரு பொதுவான கருத்தாக உள்ளது. பாதுகாப்பான டிஜிட்டல் மென்பொருளை தயாரிக்க முடியாது என்பதை குறிப்பதுபோல் உள்ளது. இது தவறு.
ப்ளூடூத், வைபை, இன்டர்நெட் என, எந்த ஒரு இணைப்பும் இல்லாமல் செயல்படக் கூடிய மூன்றாம் தலைமுறை மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை இந்தியாவில் பயன்படுத்துகிறோம்.
இது தொழிற்சாலையில் கட்டுப்பாட்டு முறையுடன் உருவாக்கப்படுகிறது. அதில் யாரும் எந்த திருத்தத்தையும் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால், அது வேலை செய்யாது. இதுபோன்ற சிறப்பான இயந்திரங்களை நாங்கள் உருவாக்கிஉள்ளோம். உங்களுக்கு வேண்டுமானால், அது குறித்த பயிற்சியை, செயல் விளக்கத்தை அளிக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருப்பு பெட்டி
தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் மூன்றாம் தலைமுறை மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை, மூன்று ஐ.ஐ.டி.,க்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் வடிவமைத்துள்ளனர்.
தேர்தல் கமிஷனின் உயர் தொழில்நுட்ப நிபுணர் குழு, இயந்திரங்களை பராமரித்து, அவற்றை கண்காணித்து வருகிறது.
இது குறித்து, மும்பை ஐ.ஐ.டி., பேராசிரியர் தினேஷ் சர்மா கூறியுள்ளதாவது:
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களும், நம்முடைய இயந்திரங்களும் வேறுபட்டவை. எந்த ஒரு இணைப்பும் இல்லாமல் செயல்படக் கூடியது நம்முடைய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்.
அதில் யாராலும் திருத்தவோ, மாற்றவோ முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து காங்., முன்னாள் தலைவர் ராகுல், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
வட மேற்கு மும்பை தொகுதியில், 48 ஓட்டுகளில் வெற்றி பெற்ற சிவசேனா வேட்பாளர், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை, தன் மொபைல்போன் வாயிலாக திறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நம் நாட்டில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், விமானங்களில் இருக்கும் கருப்புப் பெட்டி போன்றது. அதை யாரும் பரிசோதித்து பார்க்க முடியாது.
அதற்கு அனுமதியும் தரப்படுவதில்லை. இது நம்முடைய தேர்தல் நடைமுறையின் வெளிப்படைதன்மை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், எலான் மஸ்க் பதிவையும் அவர் இந்தப் பதிவுடன் இணைத்துஉள்ளார்.