தசரா யானை அஸ்வதாமா மின்வேலியில் சிக்கி பலி
தசரா யானை அஸ்வதாமா மின்வேலியில் சிக்கி பலி
தசரா யானை அஸ்வதாமா மின்வேலியில் சிக்கி பலி
ADDED : ஜூன் 11, 2024 10:43 PM

மைசூரு : மின்வேலியில் சிக்கி, தசரா யானை அஸ்வதாமா பலியாகி உள்ளது.
மைசூரு, நாகரஹொளே சரணாலயத்திற்கு உட்பட்டது, பீமனகட்டா யானைகள் முகாம். இங்கு அஸ்வதாமா, 38 என்ற யானை பராமரிக்கப்பட்டு வந்தது. நேற்று காலை முகாமில் இருந்து வெளியேறிய யானை வனப்பகுதியை நோக்கி சென்றது. வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டு உள்ள, மின்வேலியை யானை தொட்டது. இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தது.
இதுபற்றி அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானையின் உடலை பார்வையிட்டனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், யானையின் உடல் புதைக்கப்பட்டது.
காட்டு யானையாக இருந்த அஸ்வதாமா, கடந்த 2017 ல் ஹாசன் சக்லேஸ்பூரில் அட்டகாசம் செய்தது. கும்கிகள் உதவியுடன் அஸ்வதாமாவை, வனத்துறையினர் பிடித்தனர். பீமனகட்டா முகாமுக்கு கொண்டு வந்து, கும்கியாக மாற்றினர்.
மைசூரு தசரா ஊர்வலத்தின் போது, ஜம்பு சவாரி சுமக்கும் யானையை பின்தொடர்ந்து செல்லும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
கடந்த 2022, 2023ல் தசரா ஊர்வலத்திலும் அஸ்வதாமா பங்கேற்றது.
ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட, தங்க அம்பாரியை சுமந்த அர்ஜுனா யானை, கடந்த ஆண்டு டிசம்பரில் காட்டு யானையுடன் நடந்த மோதலில் இறந்தது. அர்ஜுனா இறந்த ஆறு மாதங்களில், இன்னொரு தசரா யானை அஸ்வதாமா இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.