தர்பார் ஹால், அசோக் ஹால் பெயர்கள் அதிரடி மாற்றம்
தர்பார் ஹால், அசோக் ஹால் பெயர்கள் அதிரடி மாற்றம்
தர்பார் ஹால், அசோக் ஹால் பெயர்கள் அதிரடி மாற்றம்
ADDED : ஜூலை 26, 2024 12:07 AM

புதுடில்லி: ஜனாதிபதி மாளிகையில் உள்ள, 'தர்பார் ஹால்' மற்றும் 'அசோக் ஹால்' ஆகியவை முறையே, 'கணதந்த்ர மண்டபம்' மற்றும் 'அசோக் மண்டபம்' என, பெயர் மாற்றப்பட்டு உள்ளது.
ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:
ஜனாதிபதியின் அலுவலகம் மற்றும் இல்லமான ஜனாதிபதி மாளிகை, நாட்டின் அடையாளச் சின்னமாகவும், மக்களின் மதிப்புமிக்க பாரம்பரிய இடமாகவும் திகழ்கிறது. அதை மக்கள் மேலும் அணுகக்கூடிய இடமாக மாற்றுவதற்குத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
ஜனாதிபதி மாளிகையின் சூழலை இந்தியக் கலாசார மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளைப் பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைக்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி, ஜனாதிபதி மாளிகையின் முக்கிய இரண்டு மண்டபங்களான தர்பார் ஹால் மற்றும் அசோக் ஹால் ஆகியவை முறையே கணதந்த்ர மண்டபம், அசோக் மண்டபம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தர்பார் ஹால் என்பது தேசிய விருதுகள் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடமாகும்.
தர்பார் என்ற சொல், மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் ஆட்சி புரிந்த இடம் என்பதை குறிக்கிறது. தற்போது நாட்டில் மக்கள் ஆட்சி நடக்கிறது. இதை உணர்த்தும் வகையில், கணதந்த்ர மண்டபம் என்று பெயர் மாற்றப்படுகிறது.
அசோக் ஹால், முதலில் ஒரு நடன அரங்காக இருந்தது. அசோக் என்ற சொல் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்ட அல்லது எந்தக் கவலையும் இல்லாத ஒருவரையும், அசோக மரத்தையும் குறிக்கிறது.
மேலும், அசோகர் என்பது ஒற்றுமை, அமைதியின் அடையாளமான அசோக மன்னரைக் குறிக்கிறது. இது இந்திய மத, பாரம்பரியங்கள், கலைகள் மற்றும் கலாசாரங்களில் மிகவும் சிறப்புமிக்கதாகும்.
அதனால், மொழியின் சீரான தன்மை மற்றும் ஆங்கிலமயமாக்கலின் சான்றுகளை நீக்கும் வகையில், இதற்கு, அசோக் மண்டபம் என்று பெயர் மாற்றப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.