ராகுல் போல் நடந்து கொள்ளாதீர்கள் பொறுப்புடன் செயல்படுங்கள் எம்.பி.,க்களுக்கு மோடி அறிவுரை
ராகுல் போல் நடந்து கொள்ளாதீர்கள் பொறுப்புடன் செயல்படுங்கள் எம்.பி.,க்களுக்கு மோடி அறிவுரை
ராகுல் போல் நடந்து கொள்ளாதீர்கள் பொறுப்புடன் செயல்படுங்கள் எம்.பி.,க்களுக்கு மோடி அறிவுரை
ADDED : ஜூலை 03, 2024 01:03 AM

காங்கிரசின் ராகுலை குறிவைத்து பேசிய, பிரதமர் மோடி, “தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது. உண்மையை அடிப்படையாக வைத்து, பார்லிமென்டின் நடைமுறைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்,” என, அறிவுரை வழங்கினார்.
பார்லிமென்டில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின்போது, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பல விஷயங்கள் குறித்து பேசினார்.
பிரதமர் மோடி மற்றும் சபாநாயகர் ஓம் பிர்லாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்தும், எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் பொறுப்பில்லாமல் பேசியதாக, ஆளும் தரப்பு விமர்சித்துள்ளது.
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.,க்களின் கூட்டம் டில்லியில் நேற்று காலை நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக தோல்வி அடைந்துள்ளது. இளம் வயதில் டீ விற்று வந்த நான், முன்னாள் பிரதமர் நேருவுக்குப் பின், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமரானதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
காங்கிரசின் ஒரு குடும்பத்தினர், பிரதமர் பதவியை பறித்து வந்தனர். மற்றவர்கள் அந்த பதவியில் இருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
அதுவும், டீ விற்றவர் பிரதமர் பதவியில் இருப்பது அவர்கள் கண்களை உறுத்துகிறது.
பார்லிமென்டில் அந்த கட்சியின் தற்போதைய நடத்தைகள், அவர்கள் விரக்தியின் உச்சத்தில் இருப்பதை காட்டுகின்றன.
அதனால், தனிப்பட்ட விமர்சனங்களையும், ஆதாரங்கள் இல்லாதவற்றையும், மதத்தின் அடிப்படையில் துாண்டும் வகையிலும் பேசுகின்றனர்.
இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, முதல் முறை எம்.பி.,க்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் பார்லிமென்டில் என்ன பேசுகிறீர்கள் என்பதை, உங்களுடைய தொகுதி மக்கள் கவனிக்கின்றனர். அதனால், தொகுதி மக்களின் பிரச்னைகள் குறித்து அதிகம் பேச வேண்டும்
பல்வேறு விஷயங்களில் அதிகம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை வளர்த்து கொள்ளுங்கள். மூத்த எம்.பி.,க்களிடம் இருந்து கற்று கொள்ளுங்கள்.
பார்லிமென்ட் விதிகள், நடைமுறைகளை நன்கு தெரிந்து, அதற்கேற்ப கண்ணியத்துடன் பேச வேண்டும்
லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் பேசியதை போல் பொறுப்பில்லாமல், ஆதாரம் இல்லாமல், வாய்க்கு வந்தபடி பேசுவதை தவிர்க்க வேண்டும்
நம் கூட்டணியில் உள்ள எம்.பி.,க்கள் அடிக்கடி தங்களுக்குள் சந்தித்து பேச வேண்டும். பார்லி.,யில் என்ன பேச வேண்டும், எதிர்க்கட்சிகளின் பேச்சுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பதை தயார் செய்து கொள்ள வேண்டும்
எதிர்க்கட்சிகளின் பொய்களை சுட்டிக்காட்டும் வகையில், 'டிவி' விவாதங்களில் பங்கேற்கும் நம் கூட்டணியின் பேச்சாளர் பட்டியலை தயாரிக்க வேண்டும்
அதே நேரத்தில் தானாக சென்று ஊடகங்களிடம் பேசுவது, கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவும். உங்களை சிக்க வைக்கும் முயற்சியாகவும் அது இருக்கலாம். அப்படி பேசினாலும், பொறுப்புடன் பேசுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது சிறப்பு நிருபர் -