பா.ஜ., தலைவர்கள் மீது கட்சி மேலிடம் அதிருப்தி
பா.ஜ., தலைவர்கள் மீது கட்சி மேலிடம் அதிருப்தி
பா.ஜ., தலைவர்கள் மீது கட்சி மேலிடம் அதிருப்தி
ADDED : ஜூலை 12, 2024 06:53 AM
பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணையம், 'மூடா'வில் நடந்த முறைகேடு தொடர்பாக அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்தவில்லை என்று, கர்நாடக பா.ஜ., தலைவர்கள் மீது, கட்சி மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு, மூடாவில் நிலம் ஒதுக்கியதில் நடந்த முறைகேடு ஆகியவை, அரசுக்கு பெரிய தலைவலி ஏற்படுத்தி உள்ளது.
இந்த இரண்டு வழக்குகளையும் சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு செவி சாய்க்க மறுக்கிறது.
ஆனாலும் அரசை கண்டித்து பா.ஜ., பெரிய அளவில் போராட்டம் நடத்தவில்லை. இதனால் தலைவர்கள் மீது கட்சி மேலிடம் அதிருப்தியில் உள்ளது.
'பா.ஜ., ஆட்சி நடந்தபோது, எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு கூறியதுடன், 'பேசிஎம்' போஸ்டர்களை ஒட்டி, மக்களிடம் தவறான தகவல் பரப்பியது. 'ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை வழக்கில், நமது அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தன.
'இப்போது காங்கிரஸ் அரசில், இரண்டு பெரிய முறைகேடுகள் நடந்தும், பெரிய அளவில் போராட்டம் நடத்தாமல் இருப்பது ஏன். இந்த இரண்டும் முறைகேடுகளும் முதல்வரின் நாற்காலியை ஆட்டிப் பார்க்கும் வழக்குகள்.
அனைவரும் ஒற்றுமையாக இருந்து அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்துங்கள்' என்று, கர்நாடக பா.ஜ., தலைவர்களுக்கு, கட்சி மேலிடம் அறிவுரை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.