Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ டெங்கு விழிப்புணர்வு 'ரீல்ஸ்' செய்தால் பரிசு பெங்., மாநகராட்சிக்கு மக்கள் எதிர்ப்பு

டெங்கு விழிப்புணர்வு 'ரீல்ஸ்' செய்தால் பரிசு பெங்., மாநகராட்சிக்கு மக்கள் எதிர்ப்பு

டெங்கு விழிப்புணர்வு 'ரீல்ஸ்' செய்தால் பரிசு பெங்., மாநகராட்சிக்கு மக்கள் எதிர்ப்பு

டெங்கு விழிப்புணர்வு 'ரீல்ஸ்' செய்தால் பரிசு பெங்., மாநகராட்சிக்கு மக்கள் எதிர்ப்பு

ADDED : ஜூலை 20, 2024 06:36 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும், 'ரீல்ஸ்' செய்வோருக்கு, ரொக்க பரிசளிக்கும் பெங்களூரு மாநகராட்சியின் அறிவிப்பு, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

பெங்களூரில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சைக்கு சேரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

'இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். வீடு வீடாக சர்வே நடத்துகிறோம்' என, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், டெங்கு குறைந்ததாக தெரியவில்லை. நேற்று முன்தினம் ஒரே நாளில், 524 பேருக்கு டெங்கு ஏற்பட்டுள்ளது.

டெங்குவில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து, மக்களுக்கு மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. இதற்கிடையில் சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெங்கு விழிப்புணர்வு தொடர்பான ரீல்ஸ்கள் செய்வோருக்கு, ரொக்கப்பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. சிறப்பான ஐந்து ரீல்ஸ்களுக்கு தலா 25,000 ரூபாய், இரண்டாவது பரிசாக ஐந்து பேருக்கு தலா 10,000 ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்ல, எந்த பள்ளிகள், அதிகமான மாணவர்கள் மூலம், ரீல்ஸ் செய்ய வைக்கிறதோ அந்த பள்ளிக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும். மாணவர்களை டெங்கு விழிப்புணர்வு வீடியோ செய்ய ஊக்கப்படுத்தும் ஆசிரியர்களுக்கும், 35,000 ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.

ரீல்ஸ் வெளியிடும் ஒவ்வொருவருக்கும், 'டெங்கு வாரியர்' என்ற பட்டம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சியின், ரீல்ஸ் போட்டிக்கு பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். 'டெங்குவை கட்டுப்படுத்த, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நல்ல விஷயம்தான். ஆனால் ரீல்ஸ் செய்ய வைத்து, அதற்கு பரிசளிப்பது தேவையற்றது.

'மழை பெய்வதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்குகிறது. சாலைகளின் பள்ளங்களில் தண்ணீர் நின்றுள்ளது. குப்பை குவிந்து கிடக்கிறது. இதை சுத்தம் செய்து, நகரில் துாய்மையை காப்பாற்ற வேண்டும்.

கொசுக்கள் உற்பத்தி அதிகம் உள்ள இடங்களில், கொசுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி செய்தால் டெங்குவை கட்டுப்படுத்தலாம். அதை விட்டு விட்டு ரீல்ஸ் செய்வதால் எந்த பயனும் இல்லை.

'ரீல்ஸ் பெயரில் லட்சக்கணக்கான ரூபாயை, வீணாக்குவதற்கு பதில், அந்த பணத்தை நகரை துாய்மையாக்க பயன்படுத்துவது நல்லது' என பலரும் மாநகராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அமைச்சர் விழிப்புணர்வு

பெங்களூரு சிவாஜி நகர் தொகுதிக்கு உட்பட்ட ராமசாமி பாளையா பகுதிக்கு நேற்று சென்ற, கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் வீடு, வீடாக சென்று டெங்கு பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், விழிப்புணர்வு தொடர்பான நோட்டீஸ்களை விநியோகித்தார். வீடுகளின் முன்பு கட்டப்பட்டிருக்கும் தொட்டிகள், டிரம்களில் இருக்கும் தண்ணீரில் கொசு தேங்கி இருக்கிறதா என்றும் ஆய்வு செய்தார். கொசு ஒழிப்பான் மருந்தையும் அடித்தார்.

பின், ராமசாமி பாளையாவில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற தினேஷ் குண்டுராவ், டெங்கு பரவலை தடுப்பது தொடர்பாக மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதையடுத்து வசந்த் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு டயாலிசிஸ் வசதிகள் இல்லை என்பதை அறிந்த அவர், டயாலிசிஸ் மையத்தை துவங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், '100 மீட்டர் சுற்றளவில் இரண்டு பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தை கண்காணிக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்க வேண்டும்.அப்பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளுக்கு சென்று, டெங்கு பாதிப்பு உள்ளதா என்று சோதனை நடத்த வேண்டும்' என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் உடன் இருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us