280 பிளாக்குகளில் ஆர்ப்பாட்டம் டில்லி காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
280 பிளாக்குகளில் ஆர்ப்பாட்டம் டில்லி காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
280 பிளாக்குகளில் ஆர்ப்பாட்டம் டில்லி காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
ADDED : ஜூன் 15, 2024 01:41 AM

ரோஸ் அவென்யூ:தேசியத் தலைநகரில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து, நகரின் 280 பிளாக்குகளில் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பிளாக் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் டில்லி பிரிவின் இடைக்காலத் தலைவர் தேவேந்திர யாதவ் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்கு பின் தேவேந்திர யாதவ் கூறியதாவது:
தலைநகரில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து, 280 பிளாக்குகளில் அப்பகுதி மக்களுடன் இணைந்து தொகுதி, பூத் அளவிலான கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவர்.
மக்களின் அவலநிலையை பா.ஜ., ஆம் ஆத்மி அரசுகள் கண்திறந்து பார்க்க வேண்டும்.
உள்ளாட்சி நிர்வாகத்தின் தோல்வியால் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்கதையாகி வருகிறது. ஹரியானாவில் உள்ள பா.ஜ., அரசும், டில்லியில் ஆம் ஆத்மி அரசும் பரஸ்பரம் புகார் கூறும் விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடுகின்றன.
தன் தண்ணீர் தேவைக்காக ஹரியானாவை டில்லி அதிகம் சார்ந்துள்ளது என்பதும், ஹரியானாவில் பா.ஜ., ஆட்சியில் இருப்பதால், தேசிய தலைநகர் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்க வேண்டியுள்ளது என்பதும் உண்மை.
பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி அரசுகள் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, நெருக்கடிக்கு ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்கின்றன.
பற்றாக்குறைக்கு காரணமான பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி அரசுகளுக்கு எதிராக அனைத்து காங்கிரஸ் தொகுதி தலைவர்களும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும்.
பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி அரசுகளின் பனிப்போரால் நகரில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
குடிநீருக்கான போராட்டத்தில் டில்லி மக்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.