ரஷ்ய போரில் உயிரிழந்த இந்தியர் உடலை மீட்டுத் தர கோரிக்கை
ரஷ்ய போரில் உயிரிழந்த இந்தியர் உடலை மீட்டுத் தர கோரிக்கை
ரஷ்ய போரில் உயிரிழந்த இந்தியர் உடலை மீட்டுத் தர கோரிக்கை
ADDED : ஜூன் 13, 2024 12:55 AM
அமிர்தசரஸ்,உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்த இந்தியர் உடலை மீட்டுத் தர வேண்டும் என பலியானவர் குடும்பத்தினர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
'நேட்டோ' எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த போரில், ரஷ்ய படையில் பல நாடுகளைச் சேர்ந்தோர் வீரர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த பலரும் இந்த போரில் ரஷ்யா அணியில் இருந்தபடி உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசைச் சேர்ந்த தேஜ்பல் சிங், 30, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்துள்ள சம்பவம் அவரின் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து தேஜ்பல் சிங்கின் மனைவி பர்மிந்தர் கவுர் கூறுகையில், ''கடந்த டிசம்பரில் தாய்லாந்து சென்ற என் கணவர், பின்னர் ரஷ்யா சென்று அங்கு ராணுவத்தில் பணியாற்றினார். உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்ட அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளன.
''கடந்த மார்ச் மாதமே, அவர் இறந்ததாகக் கூறப்படும் நிலையில், என் கணவரின் உடல் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. இறுதிச் சடங்குக்காக அவரின் உடலை இந்தியா அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்ய துாதரகம், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு இ-மெயில் அனுப்பி உள்ளோம். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
ரஷ்ய படையில் இருந்த இந்தியர்கள் இருவர் சமீபத்தில் உயிரிழந்ததை அடுத்து, அந்நாட்டு ராணுவத்தில் பணியாற்றி வரும் இந்தியர்களை உடனடியாக போரில் இருந்து விடுவிக்க வேண்டும் என ரஷ்யாவை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.