தண்ணீர்... தண்ணீர்...டேங்கர்களை விரட்டும் டில்லிவாசிகள்
தண்ணீர்... தண்ணீர்...டேங்கர்களை விரட்டும் டில்லிவாசிகள்
தண்ணீர்... தண்ணீர்...டேங்கர்களை விரட்டும் டில்லிவாசிகள்
ADDED : ஜூன் 06, 2024 11:22 PM

டில்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்வதால், டேங்கர்களை விரட்டும் நிலைக்கு நகரவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர். 'உணவை சமைப்பதற்கே போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என, குடும்பத் தலைவிகள் புலம்புகின்றனர்.
டில்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை, நகரில் கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்து வந்த வெப்ப அலையிலிருந்து மக்களுக்கு ஆறுதல் தந்தது. ஆனாலும் தண்ணீர் பிரச்னைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
டேங்கர் லாரிகளுக்காக நகரவாசிகள் காத்திருக்கும் நிலை தொடர்கிறது. பிளாஸ்டிக் பக்கெட்களையும் கேன்களையும் துாக்கிக் கொண்டு டேங்கர் லாரிகளின் பின்னால் ஓடும் நிலையால் குடும்ப பெண்கள் கடும் துயரை சந்தித்து வருகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறையால் மக்களின் அன்றாட நடைமுறைகள் சீர்குலைந்துள்ளன. அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டேங்கர் லாரிகளில் இருந்து பிளாஸ்டிக் கேன்களில் பிடிக்கும் தண்ணீரில் சமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெண்கள் புலம்புகின்றனர்.
பல நேரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சமைப்பதே பிரச்னையாக இருப்பதாக அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
டேங்கர் லாரி பிரச்னை குறித்து, சாணக்யாபுரி, விவேகானந்த் கேம்ப் இல்லத்தரசி ஒருவர் கூறியதாவது:
தண்ணீர் இல்லை. இதனால் காலை எழுந்தது முதல் பிரச்னை தான். காலை 6:00 மணிக்கே தண்ணீருக்காக வரிசையில் நிற்கிறோம். டேங்கர் லாரி 7:00 அல்லது 8:00 மணிக்கு வருகின்றன.
லாரி வரும் நேரத்திற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. சில நேரங்களில் வராமலும் அவதிப்பட்டுள்ளோம். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே டேங்கர் லாரி வருகிறது. டேங்கர் லாரி தண்ணீருக்காக குடும்பமே காத்துக்கிடக்கிறோம்.
சில நாட்களில் டேங்கர் லாரிகளில் வரும் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. அதை துணி துவைப்பதற்கு கூட பயன்படுத்த முடியவில்லை. ஆனாலும் எங்களுக்கு வேறு வழி இல்லை.
ஒரே ஒரு ஆழ்துளைக்கிணறு உள்ளது. அதைக் கொண்டு இந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் குடிப்பதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இயற்கை உபாதைகளுக்கு டேங்கர் லாரி தண்ணீர்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
நகரின் பல பகுதிகளிலும் இதே நிலை நீடித்து வருகிறது. யமுனை ஆற்றில் உபரி நீரை திறந்து விடும்படி, ஹிமாச்சல பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதனால் தண்ணீர் பிரச்னை படிப்படியாக தீரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர் -