தண்ணீர் அளவை குறைத்த ஹரியானா நீதிமன்றத்தில் முறையிட டில்லி முடிவு
தண்ணீர் அளவை குறைத்த ஹரியானா நீதிமன்றத்தில் முறையிட டில்லி முடிவு
தண்ணீர் அளவை குறைத்த ஹரியானா நீதிமன்றத்தில் முறையிட டில்லி முடிவு
ADDED : ஜூன் 07, 2024 07:46 PM
புதுடில்லி:“அண்டை மாநிலமான ஹரியானா அரசு யமுனையில் திறந்து விடும் தண்ணீர் அளவை குறைத்துள்ளதால், ஹிமாச்சலப் பிரதேசம் தண்ணீர் திறந்து விட்டாலும் டில்லியின் தண்ணீர் தட்டுப்பாடு நீங்காது,” என, டில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கூறினார்.
டில்லி வஜிராபாத் அணையை, டில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி சிங் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அதிஷி கூறியதாவது:
டில்லி மக்களுக்கு எதிரான ஹரியானாவை ஆளும் பா.ஜ., அரசு சதி செய்கிறது.
யமுனை நதியில் உள்ள வஜிராபாத் அணையின் நீர்மட்டம் கடந்த 2ம் தேதி 671 அடியாக இருந்தது. இப்போது, 669.7 அடியாக குறைந்துள்ளது. நீர் மட்டம் இப்படி குறைந்து கொண்டே போனால், டில்லி மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி எப்படி தண்ணீர் வழங்க முடியும்.
தேசிய தலைநகர் பிராந்தியத்துக்கு 137 கியூசெக் உபரி நீர் திறந்து விடுமாறு ஹிமாச்சலப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஹிமாச்சல் அரசு வழங்கும் தண்ணீரை டில்லிக்கு உடனடியாக திறந்து விட ஹரியானா அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், ஹரியானாவை ஆளும் பா.ஜ., அரசு, டில்லிக்கு திறந்து விடும் தண்ணீர் அளவைக் குறைத்து விட்டது. இதனால், ஹிமாச்சலப் பிரதேச அரசு டில்லிக்கு யமுனையில் உ-பரி நீர் திறந்து விட்டாலும், டில்லி மக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க முடியாது. டில்லிக்கு திறந்து விடும் நீர் அளவை ஹரியானா அரசு குறைத்துள்ளதை உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.