இடுக்கியில் தொடரும் மழையால் சேதம் அதிகரிப்பு மூணாறில் மாட்டுபட்டி அணை அருகே மண் சரிவு
இடுக்கியில் தொடரும் மழையால் சேதம் அதிகரிப்பு மூணாறில் மாட்டுபட்டி அணை அருகே மண் சரிவு
இடுக்கியில் தொடரும் மழையால் சேதம் அதிகரிப்பு மூணாறில் மாட்டுபட்டி அணை அருகே மண் சரிவு
ADDED : ஜூலை 18, 2024 07:42 PM

மூணாறு:கேரளமாநிலம் இடுக்கியில் பலத்த மழையால் மரங்கள் சாய்ந்தும், மண்சரிவாலும் சேதங்கள் அதிகரித்து வருகின்றன.
இடுக்கியில் கடந்த ஆறு நாட்களாக காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மழை சற்று குறைந்த நிலையில் நேற்று அதிகரித்தது. மாவட்டத்தில் நேற்று கன மழைக்கான ' ஆரஞ்ச் அலெர்ட்' முன்னெச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்து, மண்சரிவு ஏற்பட்டது. கடந்த நான்கு நாட்களில் 23 வீடுகள் சிறியளவிலும், இரண்டு வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்தன. ரூ. பல லட்சம் மதிப்பிலான விளை பொருட்கள் சேதமடைந்தன.
மூணாறில் மவுண்ட் கார்மல் சர்ச் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் லட்சம் காலனியைச் சேர்ந்த 33 பேர் ஜூன் 25 முதல் தங்கி உள்ளனர். உடும்பன்சோலை பாறைதோட்டில் ஏற்பட்ட மண்சரிவில் மணிராஜாவின் வீடு சேதமடைந்ததால், அவரது குடும்பத்தினர் 5 பேர் பாறைத்தோடு சமுதாய கூடம் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
அடிமாலி- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஆனவிலாசம் அருகே ரோட்டில் மரம் சாய்ந்து போக்குவரத்து பதிக்கப்பட்டது. உப்புதரா ஒன்பது ஏக்கர் பகுதியில் மழையால் குட்டியம்மா வீடு முற்றிலுமாக இடிந்தது. கட்டப்பனை அருகே வெள்ளயாம்குடி லட்சம் வீடு காலனியில் மரம் சாய்ந்து பஷீலாவின் வீடு சேதமடைந்தது. கருணாபுரத்தில் ரவீந்திரன் வீடு மீது மரம் சாய்ந்து கூரை சேதமடைந்தது.
தடை
கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் முதல் இரும்புபாலம் வரை சுற்றுலா பயணிகள் உள்பட தேவையற்ற வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
மூணாறில் ஜூலை 16ல் 12 செ.மீ., மழை பெய்த நிலையில் நேற்று காலை 8:00 மணிப்படி 13.8 செ.மீ., மழை பதிவானது. பகலிலும் பலத்த மழை பெய்ததால் முதிரை புழை ஆறு உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
முடங்கியது
மாட்டுபட்டி, குண்டளை அணைகளில் கடந்த நான்கு நாட்களாக சுற்றுலா படகு சேவை முடங்கியது.
மாட்டுபட்டி அணை அருகே நேற்று மதியம் 3:00 மணிக்கு ரோட்டில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை மீண்டும் அதிகரித்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.