பிரித்தாளும் காங்கிரஸ்: குமாரசாமி கோபம்
பிரித்தாளும் காங்கிரஸ்: குமாரசாமி கோபம்
பிரித்தாளும் காங்கிரஸ்: குமாரசாமி கோபம்
ADDED : மார் 11, 2025 11:08 PM

பெங்களூரு; 'பிரித்து ஆளுவது தான் காங்கிரசின் வேலை. இதையே தான் 75 ஆண்டுகளாக செய்து வருகின்றனர்' என, மத்திய தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடக சட்டசபையில் நேற்று முன்தினம், பெங்களூரு மாநகராட்சியை மூன்று முதல் ஏழாக பிரிக்கும், 'கிரேட்டர் பெங்களூரு' சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக, தன் 'எக்ஸ்' பக்கத்தில் குமாரசாமி குறிப்பிட்டுள்ளதாவது:
காங்கிரசுக்கு நிகர் காங்கிரஸ் தான். ஒன்றாக இருப்பதை பிரித்து ஆளும் கொள்கையை கொண்டவர்கள். 75 ஆண்டுகளாக இதை தான் செய்து வருகின்றனர். அப்போது இந்தியாவை பிரித்தனர். இப்போது பெங்களூரு நகரை பிரிக்கின்றனர்.
நாடபிரபு கெம்பே கவுடா நிர்மானித்த பெங்களூரை வேருடன் அழிக்க நினைக்கின்றனர். பெயரளவில் மட்டுமே கிரேட்டர் பெங்களூரு நகரம். அதன் நோக்கம் அதிகாரம், வளர்ச்சிக்காக அல்ல; கொள்ளை அடிப்பதற்காக மட்டுமே.
செழிப்பான இந்தியாவை கொள்ளை அடித்த முகமது கஜினி உள்ளிட்ட கொள்ளையர்களை போன்றவர்கள், தற்போது பெங்களூருக்கு வந்துவிட்டனர். ஏழு வழிகளில் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.