Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ டில்லியில் கட்டப்படும் கேதார்நாத் கோவில் புனிதம் கெடுவதாக காங்கிரஸ் எதிர்ப்பு

டில்லியில் கட்டப்படும் கேதார்நாத் கோவில் புனிதம் கெடுவதாக காங்கிரஸ் எதிர்ப்பு

டில்லியில் கட்டப்படும் கேதார்நாத் கோவில் புனிதம் கெடுவதாக காங்கிரஸ் எதிர்ப்பு

டில்லியில் கட்டப்படும் கேதார்நாத் கோவில் புனிதம் கெடுவதாக காங்கிரஸ் எதிர்ப்பு

ADDED : ஜூலை 25, 2024 02:17 AM


Google News
டேராடூன்கேதார்நாத்தில் உள்ள கோவிலை பிரதி எடுத்து டில்லியிலும் அதே போன்ற கோவிலை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் கட்சியினர் நேற்று கேதார்நாத்துக்கு பேரணியை துவங்கினர்.

உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இமயமலை அடிவாரத்தில் புகழ்பெற்ற கேதார்நாத் உள்ளது. 'சார்தாம்' யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், இம்மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களுக்கு வந்து வழிபடுகின்றனர்.

கேதார்நாத் கோவிலை போன்றதொரு மாதிரி கோவில், டில்லி புராரி பகுதியில் கட்டப்பட உள்ளது. சமீபத்தில் நடந்த இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பங்கேற்றார்.

கேதார்நாத் கோவிலின் மாதிரியை டில்லியில் கட்டுவதற்கு, கேதார்நாத் கோவில் அர்ச்சகர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கோவிலுக்கு எதிரே தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த பிரச்னையை காங்கிரஸ் கட்சியும் கையில் எடுத்தது.

இதையடுத்து, உத்தரகண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட எந்த ஒரு கோவிலின் பெயரையும், பிற கோவில்களுக்கு, அறக்கட்டளைக்கு வைக்க தடை விதிக்கும் சட்டம் இயற்ற மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, அர்ச்சகர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சியினர் டில்லி கேதார்நாத் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'கேதார்நாத் பச்சோ' என்ற பேரணியை நேற்று துவங்கினர். ஹரித்வாரில் நடந்த இந்த பேரணியில், உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கரண் மஹரா, உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் பங்கேற்றனர். 16 நாட்கள் நடக்கும் இந்த பேரணி, உத்தரகண்டில் உள்ள கேதார்நாத் கோவிலில் நிறைவடைகிறது.

இது குறித்து, உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் கூறியதாவது:

கேதார்நாத் கோவிலை டில்லியில் மீண்டும் உருவாக்குவது, பல நுாற்றாண்டுகள் பழமையான கேதார்நாத் கோவிலின் புனிதத்திற்கு எதிரானது. அந்த கோவிலுக்கு, முதல்வர் புஷ்கர் சிங் தாமி அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

உத்தரகண்டின் சார்தாம் எனும் நான்கு கோவில்களும் நம் ஆன்மிக மரபுகளை அடையாளப்படுத்துகின்றன. அவற்றை சீர்குலைக்கும் முயற்சியை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம். டில்லி கேதார்நாத் கோவில் கட்டுமானத்தின் பின்னணியில் உள்ள அறக்கட்டளைக்கு, 'தாம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

அவர்கள் இந்த பெயரில் க்யூ.ஆர்., கோடு வாயிலாக நன்கொடை பெறுகின்றனர். அறக்கட்டளையுடன் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாகவே நாங்கள் பேரணி துவங்கிஉள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில அமைச்சர் தன்சிங் ராவத், “காங்கிரசின் பேரணி அரசியல் நோக்கம் உடையது. கேதார்நாத்துக்கு பிரதமர் மோடி மற்றும் எங்கள் அரசு கொண்டு வந்த வளர்ச்சி திட்டங்களை போன்று முன் எப்போதும் செய்யப்படவில்லை,” என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us