வயநாடு தொகுதியை கைவிட காங்., - எம்.பி., ராகுல் முடிவு?
வயநாடு தொகுதியை கைவிட காங்., - எம்.பி., ராகுல் முடிவு?
வயநாடு தொகுதியை கைவிட காங்., - எம்.பி., ராகுல் முடிவு?
ADDED : ஜூன் 13, 2024 12:48 AM

மலப்புரம், லோக்சபா தேர்தலில், வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற காங்., - எம்.பி., ராகுல், வயநாடு தொகுதியை விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியில், காங்., - எம்.பி., ராகுல் தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியிட்டார். அதே போல், தன் குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்படும் உ.பி.,யின் ரேபரேலி தொகுதியிலும் அவர் களமிறங்கினார்.
ராஜினாமா
இந்த இரு தொகுதிகளிலும் ராகுல் வெற்றி பெற்றார். சட்டப்படி, அவர் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். எந்த தொகுதியை அவர் விட்டுக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்று முன்தினம், ரேபரேலி தொகுதியில் மக்களை சந்தித்த ராகுல், தனக்கு ஓட்டளித்ததற்காக நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று வயநாடு தொகுதிக்கு வந்த ராகுல், மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, மலப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
வயநாடு தொகுதியில் என்னை இரண்டாவது முறையாக வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி. வயநாடு எம்.பி.,யாக இருக்க வேண்டுமா அல்லது ரேபரேலி எம்.பி.,யாக இருக்க வேண்டுமா என்ற குழப்பம் எனக்கு உள்ளது.
இதில் நான் எந்த முடிவு எடுத்தாலும் அது, இரு தொகுதிகளுக்கும் மகிழ்ச்சியானதாகவே இருக்கும் என உறுதி அளிக்கிறேன்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டம்.
இதில், அன்பு மற்றும் பாசத்தால், வெறுப்பு, ஆணவம் தோற்கடிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் முடிவுகள் வாயிலாக, நாட்டு மக்கள் பிரதமர் மோடிக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பி உள்ளனர். தற்போது அவர், தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆதரவு
இதற்கிடையே, வயநாடு தொகுதியின் எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய ராகுல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை மறைமுகமாக உறுதிப்படுத்தும் வகையில், கேரள காங்., தலைவர் கே.சுதாகரன் நேற்று கூறுகையில், ''தேசத்தை வழிநடத்த வேண்டிய ராகுல், வயநாட்டில் இருப்பார் என எதிர்பார்க்க முடியாது. இதனால் நாம் வருத்தப்படக் கூடாது. இதை அனைவரும் புரிந்து, ராகுலுக்கு ஆதரவு வழங்க வேண்டும்,” என்றார்.