சொகுசு கார் ஏற்பாடு செய்யாத அதிகாரியை தாக்கியதாக ஒடிசா கவர்னர் மகன் மீது புகார்
சொகுசு கார் ஏற்பாடு செய்யாத அதிகாரியை தாக்கியதாக ஒடிசா கவர்னர் மகன் மீது புகார்
சொகுசு கார் ஏற்பாடு செய்யாத அதிகாரியை தாக்கியதாக ஒடிசா கவர்னர் மகன் மீது புகார்
ADDED : ஜூலை 14, 2024 12:04 AM

புரி: சொகுசு கார் ஏற்பாடு செய்து தராததால், ஒடிசா கவர்னர் ரகுபர் தாசின் மகன் லலித் குமார் தன்னை தாக்கியதாக, கவர்னர் மாளிகையில் பணிபுரியும் அரசு அதிகாரி புகார் அளித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கவர்னராக ரகுபர் தாஸ் பதவி வகிக்கிறார்.
சரமாரி தாக்கு
தலைநகர் புவனேஸ்வரில் கவர்னர் மாளிகை இருப்பது போல, புரி மாவட்டத்திலும் கவர்னர் மாளிகை உள்ளது.
பிரசித்தி பெற்ற புரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை சமீபத்தில் நடந்து முடிந்தது.
இதில் பங்கேற்க வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, புரியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கியிருந்தார்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில சட்டசபை விவகாரத் துறையின் உதவிப் பிரிவு அதிகாரி வைகுந்த் நாத் பிரதான் என்பவர் செய்தார். இந்நிலையில், கவர்னர் ரகுபர் தாசின் முதன்மை செயலர் சாஸ்வத் மிஸ்ராவுக்கு, வைகுந்த்நாத் பிரதான் எழுதிய கடிதம்:
ஜனாதிபதி வருகையையொட்டி, புரி கவர்னர் மாளிகையில் பொறுப்பு அதிகாரியாக நான் பணியில் இருந்த போது, ஜூலை 7 இரவு 11:45 மணிக்கு, கவர்னரின் சமையல்காரர் ஆகாஷ் சிங், என்னை சந்தித்தார்.
அப்போது, கவர்னர் ரகுபர் தாசின் மகன் லலித் குமார், என்னை சந்திக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி, லலித் குமாரை சந்திக்க சென்றேன். அறைக்குள் சென்றதும், என்னை தகாத வார்த்தைகளால் அவர் திட்டினார். இதனால், நான் அங்கிருந்து வெளியேறி, மற்றொரு கட்டடத்தின் பின்னால் ஒளிந்து கொண்டேன்.
ஆனால், லலித் குமாரின் பாதுகாவலர்கள் என்னை கண்டுபிடித்து, மீண்டும் அவரது அறைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, லலித் குமார் மற்றும் அவரது பாதுகாவலர்கள் என்னை சரமாரியாக தாக்கினர்.
இந்த தாக்குதலில், என் கணுக்கால் முறிந்தது. இந்த சம்பவத்தை அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் நேரில் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால், கொலை செய்து விடுவேன் என, லலித் குமார் மிரட்டினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புரி ரயில் நிலையத்தில் தன்னை ஏற்றிச் செல்ல சொகுசு காரை அனுப்பாமல், சாதாரண காரை அனுப்பி வைத்ததால், வைகுந்த்நாத் மீது, லலித் குமார் அதிருப்தி அடைந்து தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிகிச்சை
இந்த விவகாரம் குறித்து, வைகுந்த்நாத் பிரதான் மனைவி சயோஜ், கடந்த 11ல் போலீசில் புகார் அளித்தார். எனினும் இந்த புகார் ஏற்கப்படவில்லை.
இதுகுறித்து சயோஜ் கூறுகையில், ''கவர்னரின் மகனுக்கு சேவை செய்வதற்காக என் கணவர் பணியாற்றவில்லை. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
''எங்களது புகாரை போலீசார் ஏற்கவில்லை. எனவே, போலீசாருக்கு இ - மெயிலில் புகார் அளித்துள்ளோம்,'' என்றார்.