ஆண்டுக்கு 2 முறை கல்லுாரி சேர்க்கை
ஆண்டுக்கு 2 முறை கல்லுாரி சேர்க்கை
ஆண்டுக்கு 2 முறை கல்லுாரி சேர்க்கை
ADDED : ஜூன் 12, 2024 01:16 AM
புதுடில்லி, வெளிநாடுகளில் உள்ளதை போல, நம் நாட்டில் உள்ள பல்கலைகள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில், ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடத்த யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.
நம் நாட்டில் உள்ள பல்கலைகளில், தற்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
இதில், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் மற்றும் உடல் நலப் பிரச்னைகள், தனிப்பட்ட சூழல்களால் பல்கலைகளில் சேருவதை தவறவிட்ட மாணவர்கள், ஓராண்டு காலம் வீணாவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது:
நம் பல்கலைகளில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மாணவர் சேர்க்கையை இருமுறையாக அதிகரிக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது, 2024 - 25ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. ஆண்டுதோறும் ஜூலை - ஆகஸ்ட் மற்றும் ஜனவரி - பிப்ரவரி ஆகிய இரு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம். தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம், உடல் நலப் பிரச்னைகள், தனிப்பட்ட சூழல்களால் பல்கலைகளில் சேருவதை தவறவிட்ட மாணவர்கள் ஓராண்டை வீணடிக்காமல் இருக்க இத்திட்டம் வழிவகுக்கும்.
இதன் வாயிலாக, தொழில்துறை நிறுவனங்களும் ஆண்டுக்கு இருமுறை, 'கேம்பஸ் இன்டர்வியூ' நடத்தி, அதிக மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும்.
ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை என்ற நடைமுறை, உலகெங்கிலும் உள்ள பல்கலைகளில் ஏற்கனவே அமலில் உள்ளது. நாமும் அதை பின்பற்றுவதன் வாயிலாக சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாணவர்கள் பரிமாற்றத்தை மேம்படுத்த முடியும். நம் உலகளாவிய போட்டித்தன்மை மேம்படுவதுடன், சர்வதேச கல்வித் தரத்துடன் நாம் இணைய முடியும்.
ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை என்பது கட்டாயம் அல்ல. மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதற்கு உண்டான உள்கட்டமைப்பு மற்றும் போதிய பேராசிரியர்கள் எண்ணிக்கை உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.