2009க்கு பின் மீண்டும் கூட்டணி ஆட்சி
2009க்கு பின் மீண்டும் கூட்டணி ஆட்சி
2009க்கு பின் மீண்டும் கூட்டணி ஆட்சி
ADDED : ஜூன் 05, 2024 02:01 AM

புதுடில்லி : சுதந்திர இந்தியாவில் 18 லோக்சபா தேர்தல் நடந்துள்ளன. இதில் காங்., 7, பா.ஜ., 2 என ஒன்பது முறை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தன. மற்ற ஒன்பது தேர்தல்களில், 2024 உட்பட பெரும்பான்மை ஆட்சி அமையவில்லை. 73 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் 32 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நடந்துள்ளது.
நெருக்கடி நிலை பிரகடனத்துக்குப்பின் நடந்த 1977 லோக்சபா தேர்தலில் காங்., (ஓ), பாரதிய ஜன சங்கம், பாரதிய லோக்தளம், பிரஜா சோஷலிஸ்ட் என நான்கு கட்சிகள் இணைந்து ஜனதா கூட்டணியாக போட்டியிட்டு, 295 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தன. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். இதுதான் முதல் கூட்டணி ஆட்சி.
இக்கூட்டணி இரண்டு ஆண்டு 170 நாளில் உடைந்தது. பின், இந்திரா ஆதரவுடன் சரண் சிங் 170 நாள் பிரதமராக இருந்தார். அதுவும் உடைந்தது. 1980ல் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் இந்திரா பிரதமரானார்.
அவர் மறைவுக்குப்பின் ராஜிவ் பிரதமரானார். 1989, 1991, 1996, 1998, 1999, 2004, 2009 என தொடர்ந்து ஏழு முறை கூட்டணி ஆட்சி தான். கடந்த 2014ல் பிரதமர் மோடி 282 இடங்கள் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராக பதவியேற்றார்.
2019ல் 303 இடங்கள் பெற்று இரண்டாவது முறை பதவியேற்றார். தற்போதைய தேர்தலில் பா.ஜ.,வுக்கு 240 இடங்களே கிடைத்துள்ளன. பெரும்பான்மைக்கு 272 தேவை. இதனால் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், லோக் ஜனசக்தி ஆதரவுடன் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இன்றைய அரசியல் நகர்வுகள் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.