நிலவில் தண்ணீருக்கான சுவடு சீன விஞ்ஞானிகள் தகவல்
நிலவில் தண்ணீருக்கான சுவடு சீன விஞ்ஞானிகள் தகவல்
நிலவில் தண்ணீருக்கான சுவடு சீன விஞ்ஞானிகள் தகவல்
ADDED : ஜூலை 25, 2024 01:30 AM
பீஜிங்,
நிலவில் இருந்து, 2020ல் எடுத்து வரப்பட்ட மணல் மாதிரிகளில், தண்ணீர் இருந்ததற்கான அறிகுறிகள் தென்படுவதாக, சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான சீனா, நிலவை ஆய்வு செய்வதற்காக, 2020ல் சாங்க் - இ 5 என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. அது நிலவின் மேற்பகுதியில் இருந்து மணல் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்துள்ளது.
சீன அறிவியல் அகாடமி உள்ளிட்ட அமைப்புகளின் விஞ்ஞானிகள் இதை ஆய்வு செய்துள்ளனர். விண்வெளி ஆய்வு தொடர்பான இதழில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், நிலவின் மேற்பரப்பில் இருந்து, சீன விண்கலம் எடுத்து வந்த மணல்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனிமங்களின் மாதிரிகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறிந்திராத கனிமங்களும் அதில் அடங்கும்.
மேலும், ஒரு கனிமத்தில், நிலவில் தண்ணீர் இருந்ததற்கான மூலக்கூறுகள் கிடைத்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த, 2009ல், இந்தியா அனுப்பிய சந்திரயான் - 1 விண்கலம், நிலவில் தண்ணீர் இருந்ததற்கான மூலக்கூறு ஆதாரங்களை அளித்தது.
அதுபோல் அமெரிக்காவின் நாசா, 2020ல், தன் தொலைதுார நுண்ணோக்கி வாயிலாக நடத்திய ஆராய்ச்சியில், இதை உறுதிப்படுத்தியது.
சீனா சமீபத்தில், சாங்க் - இ 6 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அது நிலவில் துளைகள் இட்டு, மணல் உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்துள்ளது.
இதன் ஆராய்ச்சியில், நிலவில் தண்ணீர் இருந்தது தொடர்பான மேலும் ஆதாரங்கள் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.