மூட நம்பிக்கைக்கு முதல்வர் சவால் இன்று மீண்டும் சாம்ராஜ்நகர் பயணம்
மூட நம்பிக்கைக்கு முதல்வர் சவால் இன்று மீண்டும் சாம்ராஜ்நகர் பயணம்
மூட நம்பிக்கைக்கு முதல்வர் சவால் இன்று மீண்டும் சாம்ராஜ்நகர் பயணம்
ADDED : ஜூலை 10, 2024 04:22 AM
சாம்ராஜ்நகர் : மூட நம்பிக்கைக்கு சவால் விடும் முதல்வர் சித்தராமையா, நான்காவது முறையாக இன்று, சாம்ராஜ்நகருக்கு வருகை தருகிறார்.
சாம்ராஜ்நகர் மாவட்ட பெயரை கேட்டாலே, அரசியல்வாதிகளுக்கு 'கிலி' ஏற்படும். குறிப்பாக முதல்வர் பதவியில் இருந்தவர்கள், பதவிக் காலம் முடியும் வரை சாம்ராஜ்நகருக்கு செல்வதை தவிர்ப்பர்.
ஏனென்றால் இங்கு வந்தால் முதல்வர் பதவி பறிபோகும் என்ற நம்பிக்கை, அன்றைய முதல்வர்களுக்கு இருந்தது. எடியூரப்பா, சதானந்தகவுடா, குமாரசாமி, ஜெகதீஷ் ஷெட்டர் என, பலரும் முதல்வராக இருந்தபோது, சாம்ராஜ்நகரை எட்டியே பார்க்கவில்லை.
ஆனால் சித்தராமையா, முதல் முறை முதல்வரான போதும், பல முறை சாம்ராஜ்நகருக்கு வந்தார். ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் நீடித்தார்.
மாவட்டம் மீதிருந்த களங்கத்தைப் போக்கினார். மூட நம்பிக்கையை தகர்த்தார். இரண்டாவது முறை முதல்வரான இவர், பதவிக்கு வந்த மூன்றே மாதங்களில் சாம்ராஜ்நகருக்கு வந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இரண்டாவது முறை சென்றபோது, சாம்ராஜ்நகரின், அம்பேத்கர் விளையாட்டு அரங்கில், வாக்குறுதித் திட்டங்களின் பயனாளிகள் மாநாடு நடத்தினார்.
லோக்சபா தேர்தலின்போது, மூன்றாவது முறையாக அங்கு சென்றார். 'ரோடு ஷோ' நடத்தினார். தற்போது நான்காவது முறையாக, இன்று சாம்ராஜ்நகருக்கு முதல்வர் சித்தராமையா வருகிறார்.
இன்று காலை 11:10 மணிக்கு, சாம்ராஜ்நகருக்கு முதல்வர் வருகிறார். இங்கு லோக்சபா தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடத்துகிறார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் வெங்கடேஷ், சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், எம்.பி., சுனில்போஸ் பங்கேற்கின்றனர்.
நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சி முடிந்து மதியம் 3:30 மணிக்கு முதல்வர் பெங்களூரு திரும்புகிறார்.