Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ வால்மீகி ஆணையத்தின் வரவு -- செலவு கணக்கு கேட்டு தலைவர் கடிதம்

வால்மீகி ஆணையத்தின் வரவு -- செலவு கணக்கு கேட்டு தலைவர் கடிதம்

வால்மீகி ஆணையத்தின் வரவு -- செலவு கணக்கு கேட்டு தலைவர் கடிதம்

வால்மீகி ஆணையத்தின் வரவு -- செலவு கணக்கு கேட்டு தலைவர் கடிதம்

ADDED : ஜூலை 03, 2024 10:27 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் 10 ஆண்டு வரவு - செலவு கணக்குகளை தரும்படி, பழங்குடியினர் நல கூடுதல் தலைமை செயலர் மஞ்சுநாத் பிரசாத்திற்கு, ஆணையத்தின் தலைவர் பசனகவுடா தத்தல் கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக பழங்குடியினர் நல துறைக்கு உட்பட்ட, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகம், பெங்களூரு வசந்த் நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் சந்திரசேகர், 52.

வால்மீகி மேம்பாட்டு ஆணையத்திற்கு அரசு ஒதுக்கிய 187 கோடி ரூபாயில் 87 கோடி ரூபாய் வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு முறைகேடு நடப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, கடந்த மே 27 ம் தேதி சந்திரசேகர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரத்தில் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்தார்.

ஆணையத்தின் தலைவரான காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தலும் பதவி விலக வேண்டும் என, பா.ஜ., கோரிக்கை வைத்தது. ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை.

இந்நிலையில் பசனகவுடா தத்தல், பழங்குடியினர் நல கூடுதல் தலைமை செயலர் மஞ்சுநாத் பிரசாத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், 'கடந்த 10 ஆண்டுகளில், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்திற்கு அரசிடம் இருந்து வந்த நிதி எவ்வளவு. அதை பயன்படுத்தி செய்யப்பட்ட திட்டங்கள் என்னென்ன. செலவு என்ன. தற்போதைய நிதிநிலை என்ன உள்ளிட்ட தகவல்களை வழங்குங்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, பசனகவுடா தத்தல் நேற்று அளித்த பேட்டி:

கடந்த 10 ஆண்டுகளில் ஆணையத்தின் வரவு, செலவு குறித்து கணக்கு கேட்டுள்ளேன். கடந்த காலங்களிலும் இதுபோன்று முறைகேடு நடந்ததா என்பதை அறிய வேண்டும். முறைகேடு நடந்தது பற்றி சி.ஐ.டி., விசாரிக்கிறது.

சி.பி.ஐ.,யும் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை சேகரித்து வருகிறது. விசாரணை அமைப்புகள் எனக்கு நோட்டீஸ் கொடுத்தால், அதற்கு பதில் அளிப்பது எனது கடமை.

ஆணையத்தின் தலைவராக, நான் பதவியேற்று சில மாதங்களே ஆகிறது. நான் பதவியேற்ற சில நாட்களிலேயே, லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அலுவலகம் பக்கமே நான் செல்லவில்லை. அப்படி இருந்தும் முறைகேட்டில் எனக்கு தொடர்பு இருப்பதாக, பா.ஜ., வினர் கூறுவதை ஏற்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us