மனைகள் ஒதுக்கீட்டில் சி.பி.ஐ., விசாரணை? முதல்வர் சித்தராமையா மறுப்பு!
மனைகள் ஒதுக்கீட்டில் சி.பி.ஐ., விசாரணை? முதல்வர் சித்தராமையா மறுப்பு!
மனைகள் ஒதுக்கீட்டில் சி.பி.ஐ., விசாரணை? முதல்வர் சித்தராமையா மறுப்பு!
ADDED : ஜூலை 05, 2024 06:13 AM

பெங்களூரு: ''என் பதவி காலத்தில், ஏழு வழக்குகளை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைத்தேன். ஆனால், பா.ஜ., ஆட்சி காலத்தில் பல வழக்குகளை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க கூறியும், ஒரு வழக்கை மட்டுமே ஒப்படைத்தனர்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகாவில் எம்.யு.டி.ஏ., எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தில் மனைகள் ஒதுக்கியதில், 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாகவும், முதல்வர் சித்தராமையாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி, எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், நேற்று விதான் சவுதாவில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு முதல்வர் சித்தராமையா வந்தார்.
அப்போது ஊடகத்தினர், எம்.யு.டி.ஏ., முறைகேடு குறித்து எழுப்பி கேள்விக்கு, விதான் சவுதா வாசல்படியில் நின்றபடி, ''இது சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டிய வழக்கு இல்லை. என் பதவி காலத்தில், ஏழு வழக்குகளை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைத்தேன். ஆனால், பா.ஜ., ஆட்சி காலத்தில் பல வழக்குகளை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க கூறியும், ஒரு வழக்கை மட்டுமே ஒப்படைத்தனர். பிறகு வந்து பேசுகிறேன்,'' என்று கூறியவாறு சென்று விட்டார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''அனைத்து வழக்கையும் சி.பி.ஐ., விசாரணைக்கு கொடுத்தால் எப்படி. சட்டசபை கூட்டத்தொடரில், பா.ஜ.,வினர் எந்த பிரச்னையை விவாதத்துக்கு எடுத்து கொள்வர் என்று தெரியவில்லை.
சபாநாயகரிடம் எந்த விவகாரம் குறித்து கடிதம் கொடுக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எம்.யு.டி.ஏ.,வில் நடந்த மோசடி குறித்து விசாரணை நடந்து வருகிறது. அனைத்தையும் சி.பி.ஐ.,க்கு கொடுக்க முடியாது. பா.ஜ.,வினருக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்,'' என்றார்.
அமைச்சர் பதில்
இதுகுறித்து மின்துறை அமைச்சர் ஜார்ஜ் கூறியதாவது,
பா.ஜ., ஆட்சியில் தான், அரசின் வளர்ச்சி பணிகளுக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு, 50 சதவீதம் நிலம், 50 சதவீதத்துக்கு இழப்பீடு தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.