3 மாதத்துக்கு ஒரு முறை ரூ.1.50 லட்சம் சம்பாதிக்கும் சகோதரர்கள்
3 மாதத்துக்கு ஒரு முறை ரூ.1.50 லட்சம் சம்பாதிக்கும் சகோதரர்கள்
3 மாதத்துக்கு ஒரு முறை ரூ.1.50 லட்சம் சம்பாதிக்கும் சகோதரர்கள்
ADDED : ஜூன் 23, 2024 06:49 AM

பல நேரங்களில் வறட்சி, பயிர் இழப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள், விவசாயிகளின் தன்னம்பிக்கையை அழித்துவிடுகின்றன.
இருப்பினும் புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு, வெற்றி பெறும் விவசாயிகள், வாழ்க்கையில் சாதிக்கின்றனர்.
இதில் கதக் மாவட்டம், லட்சுமேஸ்வரின் சோமனகவுடா பாட்டீலின் மகன்கள் சந்தேஷ் பாட்டீல், சந்தீப் பாட்டீல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மல்பெரி
இவர்கள், பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று ஏக்கரில் மல்பெரி செடி எனும் முசுக்கொட்டை பயிரிட்டு, 150 'லின்க்ஸ்' இன புழுக்களை வளர்த்து, அதில் பட்டு உற்பத்தி செய்து வருகின்றனர்.
சி.ஆர்.சி., எனும் விவசாய கூட்டுறவு ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தலின்படி, லின்க்ஸ் இன புழுக்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதால், சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.
மொத்தம் எட்டு லட்சம் ரூபாய் செலவில் பட்டுக்கூடு கட்டுதல், மல்பெரி செடி வளர்த்தல், லின்க்ஸ் வாங்குதல், சொட்டுநீர் குழாய் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொண்டனர்.
ஷிரஹட்டி தாலுகாவில் உள்ள மாகடி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரிடம் இருந்து, 6,300 ரூபாய்க்கு, 150 லின்க்ஸ் புழுக்களை வாங்கினர். தற்போது ஒரு கிலோ பட்டுக்கூடு, 630 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். கடந்த மாதம், ஒரு குவிண்டால் பட்டுக்கூடு விற்பனை செய்தார். இம்முறை மகசூல் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.
நான்கு முறை
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பட்டுக்கூடு விற்பனை செய்தால், 1.50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆண்டுக்கு நான்கு முறை விளைச்சல் கிடைக்கும். நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
பி.இ., பட்டதாரியான சந்தேஷ் பாட்டீல், பெங்களூரில் மாதம் 50,000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கின்போது கிராமத்துக்கு திரும்பினார். சகோதரர்கள் இருவரும் தந்தைக்கு துணையாக விவசாயத்தில் கைகோர்த்துள்ளனர்.
பட்டுப்புழு வளர்ப்புக்கு அதிக நாட்கள் தேவை. சோமன கவுடாவின் இரு மகன்கள் ஆதரவும் அவருக்கு பெரிய பலத்தை கொடுத்தது. மாதம் ஒருமுறை ராம்நகர் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
சந்தேஷ் பாட்டீல், சோமனகவுடா பாட்டீல் கூறுகையில், ''கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையை விட்டு விட்டு, பெங்களூரு செல்லாமல் மீண்டும் தந்தையின் விவசாய பணிகளில் ஈடுபட்டேன். இப்போது மல்பெரி பட்டுப்புழு வளர்ந்து நல்ல வருமானம் கிடைக்கிறது.
''பட்டுப்புழு வளர்க்க ஒரே ஒரு முதலீடு மட்டுமே தேவை. பின் வருவதெல்லாம் லாபம் தான். ஒருமுறை நடவு செய்த 'மல்பெரி' மூலம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை லாபம் கிடைக்கும்,'' என்றார்.
- நமது நிருபர் -