ஒத்துழைக்க மறுக்கும் பிரஜ்வல் விசாரணை அதிகாரிகளுக்கு தலைவலி
ஒத்துழைக்க மறுக்கும் பிரஜ்வல் விசாரணை அதிகாரிகளுக்கு தலைவலி
ஒத்துழைக்க மறுக்கும் பிரஜ்வல் விசாரணை அதிகாரிகளுக்கு தலைவலி
ADDED : ஜூன் 01, 2024 11:52 PM

பெங்களூரு : கர்நாடகாவில் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல், எஸ்.ஐ.டி., அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் தொகுதி ம.ஜ.த., - எம்.பி.,யாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவர் மீது இரண்டு பலாத்கார வழக்குகள், ஒரு பாலியல் தொல்லை வழக்கு பதிவாகி உள்ளன.
ஏழு நாட்கள் காவல்
ஜெர்மனியில் 34 நாட்கள் தலைமறைவாக இருந்த பிரஜ்வல், பெங்களூரு திரும்பினார். நேற்று முன்தினம் அதிகாலை 1:24 மணிக்கு விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிறப்பு புலனாய்வு குழுவினர், அவரை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் காவலின் முதல் நாள் இரவு 10:00 மணி வரை, பிரஜ்வலிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் அவரோ, 'எனக்கு எதுவும் தெரியாது; எதுவாக இருந்தாலும் என் வக்கீல் அருணிடம் தான் கேட்க வேண்டும்' என, திரும்ப திரும்பக் கூறி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார்.
நேற்றைய விசாரணையில், வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்ததாக, ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு குறித்து, பிரஜ்வலிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.
'என் மீது பாலியல் புகார் அளித்த வேலைக்காரப் பெண் யார் என்றே எனக்கு தெரியாது. பெங்களூரு, ஹாசன், ஹொளேநரசிபுராவில் உள்ள வீடுகளில், நிறைய பேர் வேலை செய்கின்றனர்.
'எத்தனை பேர் வேலையில் உள்ளனர் என்றே எனக்கு தெரியாது. பெங்களூரு, ஹாசன், டில்லியில் தான் நான் இருப்பேன்' என, பிரஜ்வல் கூறி உள்ளார்.
புகார் அளித்த வேலைக்கார பெண்ணின் புகைப்படத்தை, பிரஜ்வலிடம் விசாரணை அதிகாரிகள் காண்பித்துள்ளனர்.
புகைப்படத்தை பார்த்த பிரஜ்வல், 'இந்த பெண் யார் என்றே எனக்கு தெரியாது. இவரை நான் பார்த்ததே இல்லை. என் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் தான், இந்த பெண்ணிற்கு பணம் கொடுத்து, என் மீது புகார் அளிக்க வைத்திருப்பார்.
தலைவலி
'கார்த்திக்கை கைது செய்தால், உண்மை வெளிவரும். முதலில் அவரை கைது செய்யுங்கள்' என, விசாரணை அதிகாரிகளுக்கே பிரஜ்வல் உத்தரவிட்டு உள்ளார்.
'உங்கள் மொபைல் போன் எங்கே?' என, விசாரணை அதிகாரிகள் கேட்டதற்கு, 'என்னிடம் இருந்த மொபைல் போனை நீங்கள் பறிமுதல் செய்து விட்டீர்கள். என் பழைய மொபைல் போன், கடந்த ஆண்டே தொலைந்துவிட்டது. இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன்' என, பிரஜ்வல் கூறி இருக்கிறார்.
விசாரணைக்கு பிரஜ்வல் ஒத்துழைக்க மறுப்பதால், எஸ்.ஐ.டி., அதிகாரிகளுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.