அமீபா தொற்றிலிருந்து குணமடைந்த சிறுவன்
அமீபா தொற்றிலிருந்து குணமடைந்த சிறுவன்
அமீபா தொற்றிலிருந்து குணமடைந்த சிறுவன்
ADDED : ஜூலை 12, 2024 05:59 AM
திருச்சூர்: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவன் தீவிரசிகிச்சைக்கு பின் குணமடைந்து வருகிறார்.
மூளையை தின்னும் அமீபா எனப்படும் நெக்லேரியா போலேரி கிருமி ஏரி, குளம், ஆறு போன்ற நீர் நிலைகளில் வாழ்கின்றன. அவற்றில் குளிப்பவர்களின் மூக்கு, காது துவாரம் வழியாக உடலில் தொற்றும் இவை, மூளையை தாக்கி, திசுக்களை அழிக்கின்றன.
இதனால் மூளையில் வீக்கம் ஏற்படுகிறது. தொற்று பாதித்தோருக்கு தலைவலி, காய்ச்சல், வாந்தி, குமட்டல், வலிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களில் நான்கு பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில், கோழிக்கோடு, கண்ணுார், மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், திரிச்சூர் மாவட்டம் படூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுவனின் உடல்நிலை மோசமானதை அடுத்து, அவரது மூளை மற்றும் தண்டுவட திரவத்தை பரிசோதித்ததில், சிறுவனுக்கு மூளை தின்னும் அமீபா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது சிறுவன் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிசியோதெரபி சிகிச்சைக்குப் பின் சிறுவன் வழக்கம் போல் நடப்பார் என்றும் கூறினர்.
சிறுவனுக்கு எவ்வாறு அமீபா தொற்றுஏற்பட்டது என இதுவரை தெளிவாக தெரியவில்லை. சமீபத்தில் எந்த நீர்நிலையிலும் தான் குளிக்கவில்லை என சிறுவன் கூறியுள்ளார்.
அதே சமயம், வீட்டுக்கு அருகே உள்ளபகுதியில் தினமும் கால்பந்து விளையாடுவேன் என கூறியுள்ளார். இதனால் தொற்று எவ்வாறு ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் குழப்பம்அடைந்துள்ளனர்.