தொழிலாளர்களின் உடல்கள் கொச்சி ஏர்போர்ட் வந்தன *குவைத் பயங்கரம்
தொழிலாளர்களின் உடல்கள் கொச்சி ஏர்போர்ட் வந்தன *குவைத் பயங்கரம்
தொழிலாளர்களின் உடல்கள் கொச்சி ஏர்போர்ட் வந்தன *குவைத் பயங்கரம்
ADDED : ஜூன் 15, 2024 01:15 AM

கொச்சி, குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழகம் மற்றும் கேரள தொழிலாளர்கள் 30 பேர் உட்பட 45 இந்தியர்களின் உடல்கள், கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு நேற்று எடுத்து வரப்பட்டன. ஏழு தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேற்காசிய நாடான குவைத்தின் மங்காப் நகரில் இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 12ம் தேதி அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
மலரஞ்சலி
இதில், 49 பேர் உடல் கருகி பலியாகினர்; இதில், 45 பேர் இந்தியர்கள். அவர்கள் அனைவரின் உடல்களும் நம் விமானப்படை விமானத்தில், கேரளாவின் கொச்சிக்கு நேற்று எடுத்து வரப்பட்டன.
தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 23 பேரும், தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் மத்திய மற்றும் மாநில அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கேரளாவைச் சேர்ந்தோரின் உடல்களுக்கு மாநில முதல்வர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியம் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
தமிழர்கள் ஏழு பேரின் உடல்களுக்கு அயலக தமிழர் நலத் துறை அமைச்சர் மஸ்தான் அஞ்சலி செலுத்தினார். கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரின் உடல், அந்த மாநில அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
எஞ்சியவர்களின் உடல்கள், வேறொரு விமானம் வாயிலாக டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “வாழ்வாதாரத்துக்காக தாயகத்தை விட்டு சென்ற இந்திய தொழிலாளர்களின் மரணம் நாட்டிற்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் பேரிழப்பாகும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க குவைத் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
''இறந்தவர்கள் அங்கே பணியாற்றியதால், அந்நாட்டு அரசு அவர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். அதை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும்,” என்றார்.
சொந்த ஊர்
இறந்தவர்களின் உடலுக்கு போலீஸ் மரியாதை அளிக்கப்பட்டதை அடுத்து, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சுகள் வாயிலாக, அனைவரின் உடல்களும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கிடையே, குவைத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழர் ஒருவர் நேற்று பலியானார். இதையடுத்து, தீ விபத்தில் பலியான இந்தி யர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.