Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சுற்றுலா பயணியரை கவரும் கருப்பு மணல் கடற்கரை

சுற்றுலா பயணியரை கவரும் கருப்பு மணல் கடற்கரை

சுற்றுலா பயணியரை கவரும் கருப்பு மணல் கடற்கரை

சுற்றுலா பயணியரை கவரும் கருப்பு மணல் கடற்கரை

ADDED : ஜூன் 09, 2024 03:08 AM


Google News
Latest Tamil News
உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரில் 'தில்மதி' என்ற கருப்பு மணல் கடற்கரை அமைந்துள்ளது. இங்குள்ள மணல் கருப்பு எள் போல் காட்சியளிக்கிறது. இதனால் தான், இந்த கடற்கரைக்கு தில்மதி என்ற பெயர் வந்தது.

கொங்கனி மொழியில், 'தில்லு' என்றால், எள் விதைகள் என்றும் 'மட்டி' என்றால், மண் என்றும் பொருள். இது காலப் போக்கில், தில்மதி என்று மருவியது. பாசால்டிக் என்ற பாறைகளால் சூழப்பட்டிருப்பதால், மணல் இயற்கையாகவே கருப்பு நிறத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கார்வாரில் இருந்து, 13 கி.மீ., தொலைவில் இந்த கடற்கரை உள்ளது. இங்கு, மீனவர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டினரை காணலாம். ஆனால், அருகில் உள்ள மற்ற கடற்கரைகளுடன் ஒப்பிடுகையில், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். கூட்டம் இல்லாததால், இயற்கையை ரசிக்க அமைதியான சூழலை ஏற்படுத்துகிறது.

அரபிக்கடலை ஹாயாக ரசிக்கவும், கடல் அலைகளில் விளையாடவும் ஏற்ற இடமாக உள்ளது. இங்கு ஏற்படும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன காட்சி, கண்களுக்கு விருந்தளிக்கும் என்பதை மறுக்க முடியாது. மராத்திய மன்னர்கள் ஆட்சி காலத்தில், மிகவும் பிரபலமான வர்த்தக துறைமுகமாக இருந்துள்ளது என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பின்னர், ஆங்கிலேயர், போர்ச்சுகீசியர்கள் ஆட்சி காலத்தில், உத்தர கன்னடா மற்றும் கோவாவின் எல்லையாக மாறியது.

இன்றைய நெருக்கடியான வேலை பளுவில் சிக்கி தவிப்பவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களுடன், அமைதியாக நேரத்தை செலவிடவும், அற்புதமான காட்சிகளை அனுபவிக்கவும் கருப்பு மணல் கடற்கரைக்கு செல்லலாம். கடலில் நாமே மீன் பிடித்து மகிழவும் வசதி உள்ளது.

பாறைகள் அல்லது அருகில் உள்ள மலை குன்றுகள் மீது கூடாரங்களை அமைத்து, இரவை கழிக்கவும் சுற்றுலா நிறுவனங்கள் வசதி ஏற்படுத்தி தருகிறது.

காலை முதல், இரவு வரை சுட சுட மீன் வறுவல், மீன் குழம்பு சாப்பிட ஏற்ற இடமாகவும் கருதப்படுகிறது.

பெங்களூரில் இருந்து கார்வாருக்கு ரயில், பஸ்சில் செல்லலாம். அங்கிருந்து, கடற்கரைக்கு உள்ளூர் போக்குவரத்து பயன்படுத்தலாம். மங்களூரு, கோவாவுக்கு விமானத்தில் பயணித்தும், செல்லலாம். சமீப காலமாக இளைஞர்கள் அதிகமாக விரும்பி தில்மதி கடற்கரைக்கு வருகின்றனர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us