/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு சென்ட்ரலில் அதீத பரபரப்பு இறுதி கட்டத்தில் பா.ஜ., மோகன் 'எஸ்கேப்' பெங்களூரு சென்ட்ரலில் அதீத பரபரப்பு இறுதி கட்டத்தில் பா.ஜ., மோகன் 'எஸ்கேப்'
பெங்களூரு சென்ட்ரலில் அதீத பரபரப்பு இறுதி கட்டத்தில் பா.ஜ., மோகன் 'எஸ்கேப்'
பெங்களூரு சென்ட்ரலில் அதீத பரபரப்பு இறுதி கட்டத்தில் பா.ஜ., மோகன் 'எஸ்கேப்'
பெங்களூரு சென்ட்ரலில் அதீத பரபரப்பு இறுதி கட்டத்தில் பா.ஜ., மோகன் 'எஸ்கேப்'
ADDED : ஜூன் 04, 2024 11:20 PM

பெங்களூரு: பெங்களூரு சென்ட்ரலில் போட்டியிட்ட, பா.ஜ., வேட்பாளர் மோகன் தோல்வி முகத்தில் இருந்தார்; இறுதியில் வெற்றி பெற்றார்.
பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில் 2009, 2014, 2019 லோக்சபா தேர்தல்களில், பா.ஜ., - எம்.பி.,யாக வெற்றி பெற்றவர் மோகன். நான்காவது முறையாக இந்த தேர்தலிலும் களமிறங்கினார். நேற்று 25 சுற்றுகளாக நடந்த ஓட்டு எண்ணிக்கையில் முதல் நான்கு சுற்றுகளில் மோகன் முன்னிலை வகித்தார்.
ஐந்தாவது சுற்றில் இருந்து, காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான், தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் 80 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார். வசந்த நகர் மவுண்ட் கார்மல் கல்லுாரியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து, மோகன் பதற்றமாக வெளியேறினார். மன்சூர் அலிகான் வெற்றி பெறுவார் என்று கருதப்பட்டது.
இதனால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட ஆரம்பித்தனர். ஆனால் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ள மஹாதேவபுரா, சி.வி., ராமன் நகர் தொகுதிகளில் பதிவாகி இருந்த, ஓட்டுகளை எண்ண ஆரம்பித்ததும், நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.
80 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையில் இருந்த மன்சூர் அலிகான், சர்ரென கீழே இறங்கி வந்தார். இறுதியில் 32,707 ஓட்டுகள் வித்தியாசத்தில், மோகன் வெற்றி பெற்றார். மோகன் 6,58,915 ஓட்டுகளும், மன்சூர் அலிகான் 6,26,208 ஓட்டுகளும் பெற்றனர்.
சட்டசபை தொகுதிகளின் அடிப்படையில், காங்கிரஸ், பா.ஜ., ஓட்டுகள் வருமாறு:
l மின்சார அமைச்சர் ஜார்ஜ் எம்.எல்.ஏ.,வாக உள்ள, சர்வக்ஞர் நகரில் காங்கிரசுக்கு 1,40,794; பா.ஜ.,வுக்கு 66,550 ஓட்டுகள் கிடைத்தன. காங்கிரசுக்கு 74,244 அதிக ஓட்டுகள் கிடைத்தன.
l பா.ஜ., - எம்.எல்.ஏ., ரகுவின் தொகுதியான சி.வி.ராமன் நகரில், பா.ஜ.,வுக்கு 73,460; காங்கிரசுக்கு 53,346 ஓட்டுகள். பா.ஜ.,வுக்கு 20,114 அதிக ஓட்டுகள் கிடைத்தன.
l காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் ஹர்ஷத்தின் தொகுதியான சிவாஜிநகரில், காங்கிரசுக்கு 70,731; பா.ஜ.,வுக்கு 43,221 ஓட்டுகள் விழுந்திருந்தன. இங்கு காங்கிரசுக்கு 27,510 அதிக ஓட்டுகள் கிடைத்தன.
l சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவின் காந்திநகர் தொகுதியில், பா.ஜ.,வுக்கு 74,447; காங்கிரசுக்கு 51,123 ஓட்டுகள். இங்கு பா.ஜ.,வுக்கு 23,324 ஓட்டுகள் அதிகம் கிடைத்தன.
l பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமாரின் ராஜாஜிநகர் தொகுதியில், பா.ஜ.,வுக்கு 75,917; காங்கிரசுக்கு 36,488 ஓட்டுகள். இங்கு 39,429 ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு அதிகம் கிடைத்தன.
l வீட்டுவசதி அமைச்சர் ஜமிர் அகமதுகானின் சாம்ராஜ்பேட் தொகுதியில், காங்கிரசுக்கு 87,116; பா.ஜ.,வுக்கு 44,163 ஓட்டுகள். காங்கிரசுக்கு 42,953 ஓட்டுகள் அதிகம் கிடைத்தன.
l பா.ஜ., - எம்.எல்.ஏ., மஞ்சுளா அரவிந்த் லிம்பாவளியின், மஹாதேவபுரா தொகுதியில், பா.ஜ.,வுக்கு 2,29,632; காங்கிரசுக்கு 1,15,586 ஓட்டுகள். இந்த தொகுதியில் பா.ஜ.,வுக்கு 1,14,046 ஓட்டுகள் அதிகம் கிடைத்தன.
l காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிசின் சாந்திநகர் தொகுதியில், காங்கிரசுக்கு 70,184; பா.ஜ.,வுக்கு 49,846 ஓட்டுகள். இங்கும் காங்கிரசுக்கு 20,338 அதிக ஓட்டுகள் கிடைத்தன.
மன்சூர் அலிகானுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின், நான்கு தொகுதிகள், அதிக ஓட்டுகள் முன்னிலை பெற்று கொடுத்தாலும், அமைச்சர் தினேஷ் குண்டுராவின் காந்திநகர் தொகுதி 23,324 ஓட்டுகள், பின்னடைவு ஏற்படுத்தி கொடுத்தது. மோகன் வெற்றிக்கு மஹாதேவபுரா, சி.வி.ராமன் நகர், ராஜாஜிநகர் தொகுதிகள் தான், முக்கிய பங்கு வகித்து உள்ளது.
கடந்த 2019 தேர்தலிலும் காங்கிரசின் ரிஸ்வான் ஹர்ஷத், தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். சி.வி., ராமன் நகர், ராஜாஜிநகர், மஹாதேவபுரா தொகுதிகள் தான், அப்போதும் மோகனுக்கு வெற்றியை பெற்று கொடுத்தது.