சுரேஷ் வெற்றிக்கு குழிபறிப்பு சித்து மீது, பா.ஜ., - எம்.எல்.ஏ., 'பகீர்'
சுரேஷ் வெற்றிக்கு குழிபறிப்பு சித்து மீது, பா.ஜ., - எம்.எல்.ஏ., 'பகீர்'
சுரேஷ் வெற்றிக்கு குழிபறிப்பு சித்து மீது, பா.ஜ., - எம்.எல்.ஏ., 'பகீர்'
ADDED : ஜூன் 09, 2024 02:53 AM

துமகூரு ; லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரலில் போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷுக்கு குழிபறித்து, முதல்வர் சித்தராமையா தோற்கடித்ததாக, பா.ஜ., -எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா 'பகீர்' கிளப்பியுள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக இருக்கும் சிவகுமாருக்கு, முதல்வர் பதவி மீது கண். முதல்வர் நாற்காலியில் இருந்து சித்தராமையாவை இறக்கிவிட்டு, அந்த இடத்தில் அமர்ந்து விடலாம் என, முயற்சி செய்கிறார்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், அதற்கு தனது தலைமையே காரணம் என, மேலிடத்திடம் கூறி, முதல்வர் பதவியை வாங்கும் ஆசையில், சிவகுமார் இருந்தார்.
ஆனால் ஒன்பது இடங்களில் மட்டுமே, காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தங்கள் கோட்டை என்று கொக்கரிக்கும் பெங்களூரு ரூரலில் சுரேஷ் படுதோல்வி அடைந்தார். இதனால் அவரது அண்ணனும் துணை முதல்வருமான சிவகுமார் 'அப்செட்' ஆகி உள்ளார்.
துணை முதல்வராக இருந்தும், தம்பியை வெற்றி பெற வைக்க முடியவில்லை என, சிவகுமாரை பற்றி அவரது முதுக்கு பின்னால், காங்கிரஸ் கட்சியினரே பேச ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், துமகூரு ரூரல் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா, துமகூரில் நேற்று அளித்த பேட்டி:
காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையாவே, ஐந்து ஆண்டுகளும் முதல்வராக நீடிக்க வேண்டும் என, ஒரு அணி விரும்புகிறது.
சிவகுமார் முதல்வர் ஆகக் கூடாது. அவருக்கு கட்சியில் இருக்கும் செல்வாக்கை குறைக்க வேண்டும் என, பெங்களூரு ரூரலில் சுரேஷை சதி செய்து தோற்கடித்து உள்ளனர்.
இந்த சதியின் பின்னணியில் முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா உள்ளிட்டோர் உள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கு முன்பே, சுரேஷ் தோற்கடிக்கப்படுவார் என்று கூறினேன். அவர் 1.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்பார் என, நான் நினைத்தேன்.
ஆனால், 2,69,647 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.
சுரேஷ் தோற்றதன் மூலம், சிவகுமார் முதல்வர் ஆக மாட்டார் என்று தெரிந்துவிட்டது. சிவகுமார் முதல்வர் ஆகவில்லை என்றால், காங்கிரஸ் அரசு நீடிக்காது. அங்கு உட்கட்சி பூசல் தொடங்கிவிட்டது.
பெலகாவியில் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திர தம்மண்ணவர், லட்சுமண் சவதி ஆகியோர் இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது. பெங்களூரு ரூரலிலும் பிரச்னை வெடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.