சட்டசபைக்கு உள்ளே, வெளியே போராட்டம் நடத்த பா.ஜ., முடிவு
சட்டசபைக்கு உள்ளே, வெளியே போராட்டம் நடத்த பா.ஜ., முடிவு
சட்டசபைக்கு உள்ளே, வெளியே போராட்டம் நடத்த பா.ஜ., முடிவு
ADDED : ஜூலை 12, 2024 06:50 AM

பெங்களூரு: ''முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, தலித்களின் விரோதி என்பதை வெளிச்சமாகி உள்ளது. இந்த தலித் விரோத அரசை கண்டித்து பா.ஜ., தரப்பில் சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தப்படும்,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
கர்நாடகாவில், மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் வரும் 15ம் தேதி துவங்கி, 26ல் முடிகிறது. இந்த வேளையில், சட்டசபை, மேலவையில், ஆளுங்கட்சியின் தோல்விகள் குறித்து கேள்விகள் எழுப்பி திணறடிக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது. மேலும், சட்டசபைக்கு வெளியேவும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
முக்கிய ஆலோசனை
இது தொடர்பாக, கட்சியின் மாநில நிர்வாகிகளுடன், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாநில தலைவர் விஜயேந்திரா நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உட்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மாநில பொதுச்செயலர் சுனில்குமார் கூறியதாவது:
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் எஸ்.டி., சமுதாயத்தினரின் நலனுக்கு பயன்படுத்த வேண்டிய நிதியை, காங்கிரஸ் விழுங்கி விட்டது.
இதுபோன்று, எஸ்.சி., சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்தி கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம், எஸ்.சி., - எஸ்.டி.,யினருக்கு பெரிய அளவில் காங்கிரஸ் அநீதி செய்துள்ளது.
ஆனால், பா.ஜ., ஆட்சியில், அவர்களின் நலனுக்காக, இட ஒதுக்கீட்டை உயர்த்தியது.
வேதனை சம்பவம்
தலித் நலனுக்கு என்று கூறி கொண்டே, தலித்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்து, ஊழலில் ஈடுபட்டுள்ளது.
இந்த ஊழல் செய்யும் முயற்சிக்கு முதல்வர் சித்தராமையா தான் கேப்டன். மற்ற அமைச்சர்கள், முதல்வருக்கு உறுதுணையாக இருந்தது வேதனைக்கு உரிய சம்பவம்.
மாநிலத்தில் நடப்பது முறைகேடுகள் செய்யும் அரசு. 'மூடா' முறைகேடு, வால்மீகி முறைகேடு, எஸ்.சி., முறைகேடு, தொழிலாளர் முறைகேடு இப்படி வெறும் முறைகேடுகளை மட்டுமே செய்து வருகிறது. ஆனால், வளர்ச்சி பணிகள் மட்டும் பூஜ்யம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறியதாவது:
தலித்களுக்கு ஒதுக்கப்பட்ட 12,000 கோடி ரூபாய் நிதியை, வாக்குறுதி திட்டங்களுக்கு காங்கிரஸ் அரசு பயன்படுத்தி கொண்டுள்ளது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, தலித்களின் விரோதி என்பதை வெளிச்சமாகி உள்ளது.
இந்த தலித் விரோத அரசை கண்டித்து பா.ஜ., தரப்பில் சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தப்படும். தான், தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் தலைவர் என்று அடிக்கடி சொல்லும் சித்தராமையா செய்தது பெரிய குற்றம்.
இவ்வாறு அவர் கூறினார்.