பார்லி., நிலைக்குழு தலைவர் பதவி யாருக்கு? தி.மு.க., - எம்.பி.,க்களிடையே எதிர்பார்ப்பு!
பார்லி., நிலைக்குழு தலைவர் பதவி யாருக்கு? தி.மு.க., - எம்.பி.,க்களிடையே எதிர்பார்ப்பு!
பார்லி., நிலைக்குழு தலைவர் பதவி யாருக்கு? தி.மு.க., - எம்.பி.,க்களிடையே எதிர்பார்ப்பு!
ADDED : ஜூலை 11, 2024 10:02 PM
பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் பதவிக்கான பெயர்களை பரிந்துரை செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க.,வுக்கு கிடைக்கப்போகும் நிலைக்குழு தலைவர் பதவிக்கு, அக்கட்சித் தலைமை யாரை பரிந்துரை செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பார்லிமென்டில் நிலைக்குழு தலைவர் பதவி மிக முக்கியமானது. நிலைக்குழு தலைவருக்கு, மத்திய அரசின் ஒவ்வொரு துறை செயலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளையும் சம்மன் செய்ய உரிமை உண்டு.
அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து, துருவி துருவி கேள்விகளும், சந்தேககங்களும் எழுப்பி நெருக்கடியை தர முடியும். இத்தனை முக்கியத்துவமும், கவுரவமும் வாய்ந்த இந்த பதவிகளை கைப்பற்றுவதில், அரசியல் கட்சிகளிடையே போட்டா போட்டி இருப்பது வழக்கம்.
எம்.பி.,க்களின் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் இந்த பதவிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்றாலும், இதற்கென்று விதிமுறைகள் ஏதும் இல்லை. ஆளுங்கட்சியின் கடைக்கண் பார்வை இருந்தால் போதும்; பதவிகளை கணிசமாக கைப்பற்றலாம். நிதி, உள்துறை மற்றும் பொதுக் கணக்கு குழு தலைவர் ஆகிய மூன்று நிலைக்குழுக்கள் தான் முக்கியமானவை.
இந்த மூன்று தலைவர் பதவிகளும் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படுவது மரபு. ஆனாலும், கடந்த ஆட்சியில் பா.ஜ.,வே வைத்துக் கொண்டது. பொதுக் கணக்கு குழு மட்டும் காங்.,கிற்கு தரப்பட்டது.
இம்முறையும் நிதி மற்றும் உள்துறை ஆகிய இரண்டையும் பா.ஜ.,வே வைத்துக் கொள்ள முடிவு செய்தால், பொதுக் கணக்கு குழுவுக்கு ராகுல் தலைவராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபாவின் கீழ் 16 நிலைக்குழுக்களும், ராஜ்யசபாவின் கீழ் எட்டு நிலைக்குழுக்களும் உள்ளன. இந்த 24 நிலைக்குழுக்களுக்கும் தலைவர் பதவிகளை நியமிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
ஒதுக்கீடு செய்யப்படும் இந்த குழுக்களின் தலைவர் பதவிகளுக்கு, எம்.பி.,க்களின் பெயர்களை பரிந்துரை செய்யும்படி லோக்சபா மற்றும் ராஜ்யசபா செயலகங்களில் இருந்து, அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வரும் 17ம் தேதிக்குள் எம்.பி.,க்களின் பெயர்களை தரும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
எண்ணிக்கையின் அடிப்படையில் சமாஜ்வாதி, திரிணமுல் மற்றும் தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு லோக்சபா நிலைக்குழு தலைவர் பதவி உறுதியாக கிடைக்கும். அவ்வாறு தி.மு.க.,வுக்கு கிடைக்கப்போகும் அந்த ஒரு லோக்சபா நிலைக்குழு தலைவர் பதவியை கைப்பற்றப்போவது கனிமொழியா அல்லது டி.ஆர்.பாலுவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆட்சியில் தி.மு.க.,வுக்கு கிடைத்த நிலைக்குழுவுக்கு கனிமொழி தலைவராக்கப்பட்டார். அதன்படி, கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலை குழுவின் தலைவராக அவர் பதவி வகித்தார்.
அப்போது, தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர், லோக்சபா கட்சித் தலைவர், கட்சியின் பொருளாளர் என பல பதவிகளில் டி.ஆர்.பாலு இருந்த நிலையில், சமரச ஏற்பாடாக கனிமொழிக்கு நிலைக்குழு தலைவர் பதவி தரப்பட்டது. ரயில்வே நிலைக்குழுவின் உறுப்பினர் பதவி பாலுவுக்கு தரப்பட்டது.
இம்முறை பார்லிமென்ட் கட்சித் தலைவர் பதவியை கனிமொழியிடம், டி.ஆர்.பாலு தாரை வார்த்துவிட்டார். வெறும் லோக்சபா கட்சித் தலைவராக உள்ள டி.ஆர்.பாலுவுக்கு, நிலைக்குழு தலைவர் பதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எல்லாவற்றுக்குமே இந்த இருவர்தானா என்ற ஏக்கத்தில் மற்ற மூத்த எம்.பி.,க்கள் சிலரும் உள்ளதால், கனிமொழி, பாலு ஆகியோரைத் தாண்டி, புதிய முகமாக வேறு யாராவது அந்த பதவிக்கு அதிரடியாக பரிந்துரை செய்யப்படுவாரா என்ற கேள்வியும் உள்ளது.
ராஜ்யசபாவில் கிடைத்த தொழில் துறை நிலைக்குழு பதவிக்கு கடந்த முறை மூத்த எம்.பி.,யான சிவா தலைவராக இருந்தார். இம்முறையும் அவரேதானா அல்லது அதிசயமாக வேறு யாராவதா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
எண்ணிக்கை பலம் இல்லாத காரணத்தால், அ.தி.மு.க.,வுக்கு நிலைக்குழு தலைவர் பதவி கிடைக்காது. அக்கட்சியின் மூத்த எம்.பி.,யான தம்பிதுரை தற்போது ராஜ்யசபா அரசு உத்தரவாத குழு தலைவாக உள்ளார். ராஜ்யசபாவில் வெறும் நான்கு எம்.பி.,க்கள் மட்டுமே உள்ள நிலையில், வரும் 2026 மார்ச் வரையில் இந்த பதவியில் தம்பிதுரை நீடிப்பார்.
-- நமது டில்லி நிருபர் -