கர்நாடகாவில் அனுமதி பெறாத பைக் டாக்சிக்கு இன்று முதல் தடை
கர்நாடகாவில் அனுமதி பெறாத பைக் டாக்சிக்கு இன்று முதல் தடை
கர்நாடகாவில் அனுமதி பெறாத பைக் டாக்சிக்கு இன்று முதல் தடை
ADDED : ஜூலை 05, 2024 06:20 AM
சாந்தி நகர்: கர்நாடகாவில் அனுமதி பெறாமல் இயங்கும் சாதாரண பைக் டாக்சி மற்றும் எலக்ட்ரிக் பைக் டாக்சி சேவைக்கு, போக்குவரத்து துறை இன்று முதல் தடை விதித்துள்ளது. 'விதிகளை மீறி இயக்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் எச்சரித்து உள்ளது.
கர்நாடகாவில் வாடகை பைக் டாக்சிகளால், ஆட்டோ, டாக்சி, கேப் ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களின் எதிர்ப்பையும் மீறி, ரேபிடோ உட்பட பல நிறுவனங்கள், அரசின் அனுமதி பெற்று, பைக் டாக்சிகள் இயக்கி வருகின்றன.
இதை கண்டித்து 2021ல் ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில், பைக் டாக்சிக்கு தடை விதிக்க கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பதிவு செய்யாத நிறுவனங்களின் அனைத்து வகையான சாதாரண பைக் டாக்சி, எலக்ட்ரிக் பைக் டாக்சிகளின் இயக்கத்துக்கு அரசு தடை விதித்தது. ஆனாலும், முறைகேடாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பெங்களூரு சாந்தி நகரில் உள்ள போக்குவரத்து துறையின் தலைமை அலுவலகத்தை, நேற்று நுாற்றுக்கணக்கான ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் முற்றுகையிட்டனர்.
'அனுமதி பெறாமல் இயங்கும் பைக் டாக்சிகளுக்கு தடை உத்தரவு பிறப்பித்தும், சில நிறுவனங்கள் உத்தரவை பின்பற்றவில்லை. அவர்கள் மீது வட்டார சாலை போக்குவரத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று கூறி, போராட்டம் நடத்தினர்.
ஒரு கட்டத்தில், அவர்கள், தடையை மீறி அலுவலகம் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஒரே நேரத்தில் பலரும் வந்ததால், போலீசார் தடுமாறினர். அவர்களை சந்தித்த போக்குவரத்து அதிகாரிகள், தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இந்நிலையில், போக்குவரத்து துறை ஆணையர் நேற்று மாலை புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
பெங்களூரில் பதிவு செய்யப்பட்ட ரேபிடோ, ஓலா, ஊபர் பைக் டாக்சிகளை தவிர, பதிவு செய்யாமல் இயங்கும் பைக் டாக்சிகள், நாளை (இன்று) முதல் இயங்கக்கூடாது.
இந்த உத்தரவை மீறி இயக்கப்படும் வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க, சிறப்பு குழு அமைக்குமாறு, நகரின் 10 வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.