Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அயோத்தி கோவில் கருவறை கூரையில் நீர் கசிவு : தலைமை அர்ச்சகர் வருத்தம்

அயோத்தி கோவில் கருவறை கூரையில் நீர் கசிவு : தலைமை அர்ச்சகர் வருத்தம்

அயோத்தி கோவில் கருவறை கூரையில் நீர் கசிவு : தலைமை அர்ச்சகர் வருத்தம்

அயோத்தி கோவில் கருவறை கூரையில் நீர் கசிவு : தலைமை அர்ச்சகர் வருத்தம்

UPDATED : ஜூன் 26, 2024 07:27 AMADDED : ஜூன் 26, 2024 01:43 AM


Google News
Latest Tamil News
அயோத்தி : ''முறையான வடிகால் அமைப்பு செய்யப்படாததால், அயோத்தி ராமர் கோவிலின் கருவறையின் மேற்கூரையில் இருந்து மழை நீர் கசிகிறது,'' என, அக்கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தியில், மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுஉள்ளது.

இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, கடந்த ஜன., 22ல் நடந்தது. அதன் பின், தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் ராமர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.

வடிகால்


உ.பி.,யில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், அயோத்தி ராமர் கோவிலின் மேற்கூரையில் இருந்து நீர் கசிவதாக, அக்கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:

ஜன., 22ல் தான் கோவில் திறக்கப்பட்டது. ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில், கோவிலின் மேற்கூரையில் இருந்து நீர் கசிவது ஆச்சரியமாக இருக்கிறது.

கடந்த 22ல் பெய்த கனமழையின் போது, கோவிலின் கருவறையில் உள்ள மேற்கூரையில் இருந்து அதிகளவு நீர் கசிந்தது.

மேலும், பூசாரி அமர்ந்திருக்கும் இடம் மற்றும் வி.ஐ.பி., தரிசனத்துக்கு மக்கள் வரும் இடத்திலும் நீர் கசிகிறது.

கோவில் வளாகத்தில் இருந்து மழைநீர் வெளியேற எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை; முறையான வடிகால் அமைப்பு இல்லை.

இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். இதில் தீர்வு காணாவிட்டால், பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்படும்.

நாட்டின் முன்னணி பொறியாளர்கள் தலைமையில் கட்டப்பட்ட கோவிலில், மேற்கூரையில் இருந்து நீர் கசிவது வருத்தமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மறுப்பு


இந்த சம்பவத்தை அடுத்து, ராமர் கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, கோவிலுக்கு வந்து மேற்கூரையில் நீர் கசிந்த இடத்தை ஆய்வு செய்தார்.

பின், செய்தியாளர்களிடம் நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில், ''கருவறை மேற்கூரையில் தண்ணீர் கசிந்ததாக வெளியான தகவல் தவறு. மின்சார ஒயருக்காக அமைக்கப்பட்ட குழாய் வழியாக மழை தண்ணீர் கசிந்துள்ளது. இரண்டாவது தள கட்டுமான பணி முடிந்ததும், இந்த பிரச்னை ஏற்படாது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us