Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மூளை தின்னும் 'அமீபா' தொற்றுக்கு கேரளாவில் மேலும் ஒரு சிறுவன் பாதிப்பு

மூளை தின்னும் 'அமீபா' தொற்றுக்கு கேரளாவில் மேலும் ஒரு சிறுவன் பாதிப்பு

மூளை தின்னும் 'அமீபா' தொற்றுக்கு கேரளாவில் மேலும் ஒரு சிறுவன் பாதிப்பு

மூளை தின்னும் 'அமீபா' தொற்றுக்கு கேரளாவில் மேலும் ஒரு சிறுவன் பாதிப்பு

ADDED : ஜூலை 07, 2024 01:22 AM


Google News
Latest Tamil News
கோழிக்கோடு, கேரளாவில் மூளையை தின்னும் 'அமீபா' தொற்றுக்கு, மேலும் ஒரு சிறுவன் பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஏற்கனவே இத்தொற்றுக்கு மூன்று குழந்தைகள் பலியான நிலையில், இந்த சிறுவனின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துஉள்ளனர்.

நான்காவது நபர்


கேரளாவின் கண்ணுாரைச் சேர்ந்த தக் ஷினா, 13, மலப்புரத்தைச் சேர்ந்த பத்வா, 5, கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மிருதுள், 12, ஆகியோர் 'அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்' என்ற தொற்றால் கடந்த இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

'நெக்லேரியா போலேரி' என்ற கிருமியால் ஏற்படும் இந்த தொற்று, மூளையை தின்னும் அமீபா என்று அழைக்கப்படுகிறது.

இந்த தொற்றால், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தின் பயோலி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், நான்காவது நபராக பாதிப்புக்குள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 1ம் தேதி, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த சிறுவனின், ரத்த மாதிரியை பரிசோதித்த போது, இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை டாக்டர்கள் உறுதிசெய்தனர்.

இதையடுத்து, உடனே சிகிச்சை அளிக்க துவங்கியதுடன், அதற்குரிய மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து வரவழைத்து அளித்ததால், தற்போது சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஏரி, குளம், ஆறுகளில் இந்த வகை கிருமிகள் வாழ்கின்றன. அவற்றில் குளிப்பவர்களின் மூக்கு, காது துவாரம் வழியாக உடலுக்குள் செல்லும் இந்த தொற்று, மூளையை தாக்கி, திசுக்களை அழிக்கிறது.

வலிப்பு


இதனால் மூளையில் வீக்கம் ஏற்படுகிறது. தொற்று பாதித்தோருக்கு தலைவலி, காய்ச்சல், வாந்தி, குமட்டல், வலிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்த பாதிப்புகளை தடுப்பது குறித்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில், அசுத்தமான நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்ப்பது, நீச்சல் குளங்கள், நீர் விளையாட்டு பூங்காக்களில் உள்ள நீர் நிலைகளில் தொடர்ச்சியாக குளோரின் பயன்படுத்தி பராமரிப்பது போன்ற அறிவுறுத்தல்களை சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.

இதேபோல், காதுகளில் தொற்றுள்ள குழந்தைகள், குளங்கள் அல்லது தேங்கிய நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம் எனவும், நீச்சல் பயிற்சியின்போது மூக்கில் கிளிப் அணியவும் கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதன் வாயிலாக, தொற்று பாதிப்புகளை தடுக்க முடியும் எனவும் மாநில அரசு தெரிவித்துஉள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us