ஆந்திர அரசியலில் அனல் கிளப்பும் ரூ.500 கோடி சொகுசு மாளிகை
ஆந்திர அரசியலில் அனல் கிளப்பும் ரூ.500 கோடி சொகுசு மாளிகை
ஆந்திர அரசியலில் அனல் கிளப்பும் ரூ.500 கோடி சொகுசு மாளிகை
ADDED : ஜூன் 19, 2024 02:22 AM

அமராவதி, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ருஷிகொண்டா கடற்கரை அருகே 500 கோடி ரூபாய் அரசு பணத்தில் கட்டிய சொகுசு மாளிகை, அம்மாநில அரசியல் களத்தில் அனலை கிளப்பி உள்ளது.
ஆந்திராவில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பா.ஜ., கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
விமர்சனம்
ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைமையிலான முந்தைய ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி, விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா கடற்கரை அருகே, 500 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட சொகுசு மாளிகை கட்டினார்.
மாநில சுற்றுலா துறையின் நிதியில் இருந்து கட்டப்பட்ட இந்த மாளிகை, முதல்வரின் இல்லமாக இருக்கும் என கூறப்பட்டது.
ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாநிலத்தின் முதல்வர், மக்கள் பணத்தை செலவு செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், மாளிகை கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு நாள் கூட வசிக்காமல் ஜெகன் பதவி இழந்தார். இப்போது ருஷிகொண்டா மாளிகை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது.
இது குறித்து, ஒய்.எஸ்.ஆர்.காங்., மூத்த தலைவரும், முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான அமர்நாத் கூறியதாவது:
அரசு பயன்பாட்டுக்காக தான் ஜெகன் அந்த மாளிகையை கட்டினார். ஜனாதிபதி அல்லது பிரதமர் விசாகப்பட்டினம் வரும்போது, அவர்களை அந்த மாளிகையில் முதல்வர் சந்திரபாபு தங்க வைக்கலாம்.
வி.வி.ஐ.பி., விருந்தினர்களை தங்க வைப்பதற்காக தான் அந்த மாளிகையை அரசு கட்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
'ஆந்திராவுக்கு எப்போதோ ஒரு முறை வந்து செல்லும் வி.வி.ஐ.பி.,க்களுக்கு 500 கோடி செலவு செய்து ஆடம்பர விருந்தினர் மாளிகை கட்ட வேண்டியது அவசியமா' என, அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையே, ஜெகன் அமைச்சரவையில் அங்கம் வகித்த நடிகை ரோஜா, கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
அதிருப்தி
அதில், 'முதல்வர் ஜெகனுக்கான முகாம் அலுவலகம் அமைக்க தகுந்த இடத்தை தேர்வு செய்ய கமிட்டி அமைக்கப் பட்டது.
'அந்த கமிட்டியினர், விசாகப்பட்டினத்தின் ருஷிகொண்டா கடற்கரை பகுதியை தேர்வு செய்தனர். அதன் அடிப்படையிலேயே அங்கு சொகுசு மாளிகை கட்டப்பட்டுள்ளது' என, கூறியுள்ளார்.
அது முதல்வருக்கான இல்லம் அல்ல என, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர்கள் முட்டுக் கொடுத்து வரும் நிலையில், ரோஜாவின் பேச்சு அனைத்தையும் தவிடுபொடியாக்கி உள்ளது.
ஏற்கனவே ஜெகன் மீது அதிருப்தியில் இருக்கும் ஆந்திரா மக்கள், ருஷிகொண்டா மாளிகை விவகாரத்தில் கடும் கோபம் அடைந்துள்ளனர்.