ஏர் கனடா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஏர் கனடா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஏர் கனடா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜூன் 06, 2024 12:21 AM
புதுடில்லி:டில்லியில் இருந்து டொராண்டோ செல்லும் ஏர் கனடா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
டில்லி - டொராண்டோ ஏர் கனடா விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, டி.ஐ.ஏ.எல்., எனப்படும் டில்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் அலுவலகத்திற்கும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கும் செவ்வாய்க்கிழமை இரவு 10:50 மணிக்கு மின்னஞ்சல் வந்தது. இதனால் டொராண்டோ செல்லும் ஏர் கனடா விமானத்தில் பீதி ஏற்பட்டது.
இதையடுத்து பயணியர் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறங்கப்பட்டனர். நேற்று முன் தினம் இரவு புறப்பட வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு விமானம் இழுத்துச் செல்லப்பட்டது.
பயணியர் அனைவரும் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய வசதிகள் செய்யப்பட்டன.
“விமானத்தின் ஒவ்வொரு பகுதியும் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பல மணி நேரம் நடத்தப்பட்ட வெடிகுண்டு சோதனையில், விமானத்தில் சந்தேகத்திற்கு உரிய எதுவும் கண்டறியப்படவில்லை,” என, உயர் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.