வாக்குமூலம் கொடுக்க நடிகையர் தயக்கம்; ஹேமா கமிட்டி நடவடிக்கையில் சுணக்கம்
வாக்குமூலம் கொடுக்க நடிகையர் தயக்கம்; ஹேமா கமிட்டி நடவடிக்கையில் சுணக்கம்
வாக்குமூலம் கொடுக்க நடிகையர் தயக்கம்; ஹேமா கமிட்டி நடவடிக்கையில் சுணக்கம்
ADDED : மார் 12, 2025 01:49 AM

திருவனந்தபுரம் : மலையாள திரைப்பட நடிகர்கள் மீது தொடரப்பட்ட பாலியல் வழக்குகளில் நடிகையர் வாக்குமூலம் கொடுக்க முன்வராததால், ஹேமா கமிட்டி நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வழக்குகளை தள்ளுபடி செய்வது பற்றியும் புலனாய்வு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
அறிக்கை தாக்கல்
கேரளாவில் படப்பிடிப்பின் போது நடிகையருக்கு பாலியல் தொல்லை ஏற்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இதில் நடிகை சாரதா, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வல்சலகுமாரி இடம் பெற்றிருந்தனர். கடந்த 2017-ல் விசாரணையை துவங்கிய இந்த கமிட்டி, 2019ல் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
அது வெளியிடப்படாமல் இருந்த நிலையில், 2024 ஆகஸ்டில் இந்த அறிக்கை வெளியானது.
இந்த கமிட்டியில் படப்பிடிப்பு தளங்களிலும், படப்பிடிப்புக்காக தங்கி இருந்த இடங்களிலும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை பற்றி, நடிகையர் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
திரையுலகில் இது பெரும் புயலை கிளப்பியது. நடிகையர் மற்றும் பெண் கலைஞர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின.
இதில் பிரபல முன்னணி நடிகர்களான முகேஷ் சித்திக், ஜெயசூர்யா உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவானது. இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாக்குமூலம் பெற வேண்டும்.
இதற்காக நடிகையரையும், பெண் கலைஞர்களையும் போலீசார் தொடர்பு கொண்டபோது பெரும்பாலானவர்கள் மறுத்துவிட்டனர்.
தள்ளுபடி
சிலர் புதிதாக வாக்குமூலம் அளிக்க தயாராகவும் இல்லை. இதனால், ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்குகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதிகாரி ஒருவர் கூறியது:
ஹேமா கமிட்டி மீது நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவிடம் துவக்கத்தில் வாக்குமூலம் அளித்தவர்கள் கூட, தற்போது பின்வாங்குகின்றனர்.
பதிவு செய்யப்பட்ட ஒன்பது வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் வாக்குமூலம் அளிக்க நடிகையர், பெண் கலைஞர்கள் மறுக்கின்றனர். இதனால், 40க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஹேமா கமிட்டி நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தொய்வு, பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கி உள்ளது.