கெஜ்ரிவாலை விடுவிக்க கோரி ஆம் ஆத்மி கட்சி ஆர்ப்பாட்டம்
கெஜ்ரிவாலை விடுவிக்க கோரி ஆம் ஆத்மி கட்சி ஆர்ப்பாட்டம்
கெஜ்ரிவாலை விடுவிக்க கோரி ஆம் ஆத்மி கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 29, 2024 10:20 PM

புதுடில்லி:மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்கக் கோரி, பா.ஜ., தலைமை அலுவலகம் அருகே நேற்று, ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
டில்லி அரசின் 2021 -2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவுப்படி சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையும் சிசோடியாவை கைது செய்தது.
இந்த வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத் துறையால் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், சி.பி.ஐ.,யும் சமீபத்தில் கைது செய்தது.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்க வலியுறுத்தி, தீன் தயாள் சாலையில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகம் அருகே, ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியினரும் ஜலந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசை கண்டித்தும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்கக் கோரியும் கோஷமிட்டனர்.