பயிற்சி மாணவர் பிரதிநிதிகளுடன் ஆம் ஆத்மி அமைச்சர்கள் பேச்சு
பயிற்சி மாணவர் பிரதிநிதிகளுடன் ஆம் ஆத்மி அமைச்சர்கள் பேச்சு
பயிற்சி மாணவர் பிரதிநிதிகளுடன் ஆம் ஆத்மி அமைச்சர்கள் பேச்சு
ADDED : ஜூலை 31, 2024 08:40 PM

விக்ரம்நகர்:ஐ.ஏ.எஸ்., பயிற்சி மாணவர்களுடன் ஆம் ஆத்மி அமைச்சர்கள் பேச்சு நடத்தினர்.
உயிரிழந்த மூன்று பயிற்சி மாணவர்கள் குடும்பங்களுக்கு 5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆம் ஆத்மி அமைச்சர்களுடன் மாணவர் பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர்.
மாநில கல்வி அமைச்சர் ஆதிஷி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கோபால் ராய், டில்லி மேயர் ஷெல்லி ஓபராய் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் ஆதிஷி கூறியதாவது:
பழைய ராஜேந்தர் நகர், நேரு விஹார் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி மையங்களின் பிரதிநிதிகளை நாங்கள் சந்தித்தோம். அதிக கட்டணம், பயிற்சி மையங்களில் உள்கட்டமைப்பு இல்லாமை குறித்து மாணவர்கள் தங்கள் கவலைகளையும் கருத்துக்களையும் தெரிவித்தனர்.
அதிக வாடகை மற்றும் சுரண்டல் எவ்வாறு நடக்கிறது என்பது பற்றிய கவலைகளையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
உணவுக்கான வசதிகள் இல்லாததையும் மாணவர்கள் எடுத்துரைத்தனர். இந்த குறைகள் அரசாங்கத்தால் உருவாக்கப்படும் வழிகாட்டு நெறிமுறையில் சேர்க்கப்படும் என, அவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் குழுவில் மாணவர்களும் ஒரு பகுதியாக இருப்பார்கள். போராட்டம் நடத்தும் மாணவர்களையும் சென்று சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.