ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 வயது சிறுவனின் விபரீத யோசனை
ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 வயது சிறுவனின் விபரீத யோசனை
ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 வயது சிறுவனின் விபரீத யோசனை
ADDED : ஜூன் 11, 2024 09:05 PM
புதுடில்லி:டில்லியில் இருந்து டொராண்டோ செல்லும் 'ஏர் கனடா' விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
டில்லி - டொராண்டோ 'ஏர் கனடா' விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, டி.ஐ.ஏ.எல்., எனப்படும் டில்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் அலுவலகத்திற்கும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கும் கடந்த 4ம் தேதி இரவு 10:50 மணிக்கு மின்னஞ்சல் வந்தது. இதனால் விமானத்தில் பீதி ஏற்பட்டது. பயணியர் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறங்கப்பட்டனர். விமானம் ரத்து செய்யப்பட்டது.
விமானம் பாதுகாப்பான இடத்திற்கு விமானம் இழுத்துச் செல்லப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பல மணி நேர சோதனைக்குப் பின், மின்னஞ்சல் மிரட்டல் புரளி என்பதை உறுதி செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
மின்னஞ்சல் மிரட்டல் அனுப்புவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டதையும் மிரட்டல் அனுப்பிய உடன், மின்னஞ்சல் முகவரி நீக்கப்பட்டதையும் முதலில் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர்.
தொடர் விசாரணையில் உத்தர பிரதேச மாநிலம், மீரட் நகரில் இருந்து மின்னஞ்சல் அனுப்பியதை போலீசார் கண்டுபிடித்தனர். ஸ்மார்ட் போனில் இருந்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டதை கண்டறிந்து, 13 வயது சிறுவனை கைது செய்தனர்.
அவனிடம் இருந்து இரண்டு செல்போன்களை போலீசார் மீட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தியை பார்த்து, மிரட்டல் விடுக்கும் விபரீத யோசனை சிறுவனுக்கு வந்துள்ளது. இதற்காக தன்னுடைய மொபைல் போனை பயன்படுத்தியுள்ளான்.
தன் தாயின் இன்டர்நெட்டை பயன்படுத்தி, மின்னஞ்சல் அனுப்பினால், போலீசார் தன்னை கண்டுபிடிக்க முடியுமா என்பதை சோதித்துப் பார்க்க விரும்பி, இதைச் செய்ததாக விசாரணையின்போது, சிறுவன் கூறினான்.
மறுநாள் டில்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தியை பார்த்து, அது புரளி என்று தெரிவிக்கப்பட்டிருந்ததையும் சிறுவன் பார்த்துள்ளான். பயத்தால் தன் பெற்றோரிடம் அதுபற்றி அவன் தெரிவிக்கவில்லை என்பது தெரிய வந்தது.
அவர்களின் ஒரே மகன் தற்போது, டில்லி சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். சிறுவர்களிடம் மொபைல் போன் கொடுக்கும் பெற்றோருக்கு இந்த சம்பவம், ஒரு பாடமாக இருக்கட்டும்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.