அசுத்த குடிநீரால் 4 பேர் பலி: சிக்கபல்லாபூர் அருகே பீதி
அசுத்த குடிநீரால் 4 பேர் பலி: சிக்கபல்லாபூர் அருகே பீதி
அசுத்த குடிநீரால் 4 பேர் பலி: சிக்கபல்லாபூர் அருகே பீதி
ADDED : ஜூன் 13, 2024 04:39 PM
சிக்கபல்லாபூர் : அசுத்தமான குடிநீர் குடித்ததில், ஒரே கிராமத்தில் கடந்த ஒரு மாதத்தில் நால்வர் உயிரிழந்ததால், பீதி ஏற்பட்டு உள்ளது.
சிக்கபல்லாபூர், சிந்தாமணியின் வீரபள்ளி கிராமத்தில் சமீப நாட்களாக அசுத்தமான குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதை பயன்படுத்துவதால் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர். மே 19ல், இதே கிராமத்தின் கங்கம்மா, 70; மே 21ல், முனி நாகம்மா, 70; மே 22ல் லட்சுமம்மா, 70; ஜூன் 5ல் நரசிம்மப்பா, 75, ஆகியோர் வாந்தி, வயிற்று போக்கால் உயிரிழந்தனர்.
பலர் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். குடிநீர் பைப்புகள், பெரும்பாலும் சாக்கடையை ஒட்டி பொருத்தப்பட்டுள்ளது. கிராமத்தில் துாய்மையை பின்பற்றுவதில், கிராம பஞ்சாயத்து அலட்சியம் காண்பித்ததே, அசம்பாவிதங்களுக்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நால்வர் உயிரிழந்த பின், சுகாதாரத்துறை அதிகாரிகள், வீரபள்ளி கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். கிராமத்தில் தற்காலிக மருத்துவமனை திறந்துள்ளனர்.
சிக்கபல்லாபூர் மாவட்ட சுகாதார அதிகாரி மகேஷ் குமார் கூறியதாவது:
கிராமத்தில் பல இடங்களில் குடிநீர் பைப்புகளை, சாக்கடை வழியாக பொருத்தி உள்ளனர். கிராமத்தில் துாய்மை இல்லை. துாய்மையை பின்பற்றும்படி, கிராம பஞ்சாயத்துகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
கிராமத்தில் வினியோகிக்கப்படும் குடிநீரை பரிசோதிக்க ஆய்வகத்துக்கு அனுப்பினோம். முதற்கட்ட ஆய்வில் குடிநீர், அசுத்தமாக இருப்பது தெரிந்தது. குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்த பின், இரண்டாவது முறையாக பரிசோதித்த போது சுத்தமான நீர் என, அறிக்கை வந்துள்ளது. கிராமத்தினர் பாதிப்படையாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். சூழ்நிலை கட்டுக்குள் உள்ளது; பயப்பட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.